search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உண்மையான ஏழைகளை கணக்கெடுப்பு நடத்தி பட்டியலை வழங்க வேண்டும்: அமைச்சர் கந்தசாமி
    X

    உண்மையான ஏழைகளை கணக்கெடுப்பு நடத்தி பட்டியலை வழங்க வேண்டும்: அமைச்சர் கந்தசாமி

    உண்மையான ஏழைகளை கணக்கெடுப்பு நடத்தி அரசுக்கு பட்டியல் வழங்க வேண்டும் என்று அங்கன்வாடி ஊழியர்களுக்கு அமைச்சர் கந்தசாமி வேண்டுகோள் விடுத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் குழந்தைகள் தின விழா கம்பன் கலையரங்கில் இன்று நடந்தது. விழாவை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    அங்கன்வாடிகளை 2 விதமாக பயன்படுத்தி கொள்ளலாம். ஒன்று குழந்தைகளுக்கு கல்வி கற்று கொடுக்கும் இடமாகவும், 2-வது பணிக்கு செல்லும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இடமாகவும் பயன்படுத்தி கொள்ளலாம்.

    நாட்டிலேயே அங்கன்வாடி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஒரே மாநிலம் புதுவை மாநிலம்தான். அங்கன்வாடி ஊழியர்களின் பணி நிரந்தரத்துக்கு நான் முக்கிய காரணமாக இருந்தேன்.

    அப்போது சமூகநலத் துறை அமைச்சராக இருந்த நான் முதல்-அமைச்சர் சண்முகத்துடனும், கவர்னர் ரஜனிராயுடனும் போராடி பேசி பணி நிரந்தரம் பெற்று கொடுத்தேன்.

    தற்போது 90 ஊழியர்கள் இன்று பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருப்பதாக கூறினார்கள். அவர்களையும் பணி நிரந்தரம் செய்ய துறை செயலருடன் பேசி முடிவு எடுப்போம்.

    ஏற்கனவே நான் 2 முறை அமைச்சராக இருந்துள்ளேன். அப்போதெல்லாம் நிதி நெருக்கடி என்ற பேச்சுக்கே இடமில்லை. சில திட்டங்களை நிறை வேற்ற சிறிது கால தாமதமாகும். ஆனால், தற்போது மோசமான நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளோம்.

    அங்கன்வாடி ஊழியர்களுக்கு 4 மாத சம்பளபாக்கி உள்ளது. இதே போல் பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்களுக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சம்பள பாக்கி உள்ளது.

    இத்தகைய நிதி நெருக்கடியிலும் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். உண்மையான ஏழைகளுக்கு நலத் திட்டங்கள் சென்றடைய வேண்டும். இதற்காகத்தான் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், வசதி படைத்தவர்கள் என கணக்கெடுப்பு நடத்தி பட்டியலை தரும்படி அங்கன்வாடி ஊழியர்களை கேட்டு கொண்டேன்.

    ஆனால், எங்களால் இந்த பணியை செய்ய முடியாது. இதனை செய்தால் எங்களை அங்கன்வாடி மையத்தில் பணியாற்ற முடியாத சூழல் ஏற்பட்டு விடும் என்று கூறி தவிர்த்து விட்டீர்கள்.

    தற்போது மீண்டும் கூறுகிறேன். உண்மையான ஏழைகளை கணக்கெடுத்து பட்டியலை தாருங்கள். இதற்கு உங்களுடன் சேர்ந்து பணியாற்ற இளைஞர் மன்றத்தினரையும், மகளிர் அமைப்பினரையும் அனுப்பி வைக்கிறோம். யார் இடையூறு செய்தாலும் நானே உங்களுடைய பாது காப்புக்கு வருவேன்.

    வருகிற 19-ந்தேதி இந்திரா காந்தி நூற்றாண்டு விழா கொண்டாட உள்ளோம். இந்த விழாவை அங்கன்வாடிகளில் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

    இலவசங்களை வழங்குவதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற்று விட முடியாது. முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி மிக்சி- கிரைண்டர், மழை நிவாரணம் ரூ.4 ஆயிரம் என கொடுத்தார். ஆனால், அவரால் திரும்ப வெற்றி பெற முடியவில்லை. மக்கள் வளர்ச்சியைதான் எதிர்பார்க்கிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கவர்னரை சந்தித்து 2 மணி நேரம் பேசினேன். அப்போது மாநிலத்தின் நிலையையும், எங்களது நிலைப்பாட்டையும் எடுத்து கூறினேன். அவர் தனது நிலையை மாற்றி கொள்வார் என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அன்பழகன் எம்.எல்.ஏ., மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குனர் யஷ்வந்தய்யா, பிம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர் மஞ்சுளா, குழந்தைகள் நல உரிமை ஆணைய தலைவி தேவி பிரியா, திட்ட அதிகாரி தேன்மொழி பாபு உள் ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் அங்கன்வாடி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    Next Story
    ×