search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் 100 நாள் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் சென்னை வந்தனர்
    X

    டெல்லியில் 100 நாள் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் சென்னை வந்தனர்

    டெல்லியில் 100 நாட்கள் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் நேற்று ரெயில் மூலம் சென்னை வந்தனர். பின்னர் அவர்கள் கோட்டைக்கு சென்று கோரிக்கை மனுவை வழங்கினர்
    சென்னை:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், நதிகளை இணைக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மார்ச் மாதம் 14-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 23-ந்தேதி வரை போராட்டம் நடத்தினர்.

    அதன் பின்னர் 2-ம் கட்டமாக கடந்த ஜூலை மாதம் 16-ந்தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டம் 100 நாட்களை எட்டிய நிலையிலும், விவசாயிகளை மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை. இதையடுத்து அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் நேற்று சென்னை வந்தனர்.

    டெல்லி போராட்டக்களத்தில் இருந்தது போலவே விவசாயிகள் அரை நிர்வாண கோலத்தில், கழுத்தில் மனித மண்டை ஓடுகள், எலும்புகள் உள்ளிட்டவற்றை தொங்கவிட்டபடியே சென்டிரல் ரெயில் நிலையத்தில் இறங்கினர். சிலர் தங்கள் கழுத்தில் இரும்பு சங்கிலி அணிந்தும், சிலர் மர கலப்பைகளை கையில் ஏந்தியும் கோஷமிட்டபடி வந்தனர்.

    சென்டிரல் வந்தடைந்ததும் மத்திய அரசை எதிர்த்து விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர். பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து மனு கொடுப்பதற்காக, ரெயில் நிலையத்தில் இருந்து கோட்டை நோக்கி ஊர்வலமாக செல்ல விவசாயிகள் தயாராகினர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பயணிகள் காத்திருப்பு கூடத்தில் தங்க வைத்தனர்.

    அதன் பின்னர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயி பிரதிநிதிகள் 10 பேர் மட்டும் கோட்டைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் தங்களுடைய கோரிக்கை மனுவை வழங்கினர்.

    இது குறித்து அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்லியில் 100 நாட்கள் போராட்டம் நடத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை என்றபோதிலும், நாட்டில் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறோம்.

    எனவே இந்த போராட்டம் வெற்றி தான். அடுத்த மாதம் (நவம்பர்) 20-ந்தேதி டெல்லியில் 5 லட்சம் விவசாயிகள் ஒன்றுகூடுகிறோம். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடக்கும் அந்தவேளையில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×