search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாளை ஆஸ்பத்திரியில் மர்மமாக இறந்த நர்சு உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக போராட்டம்
    X

    பாளை ஆஸ்பத்திரியில் மர்மமாக இறந்த நர்சு உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக போராட்டம்

    பாளை ஆஸ்பத்திரியில் மர்மமாக இறந்த நர்சு உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி வ.உ.சி.நகரைச் சேர்ந்தவர் அதிரதன். இவரது மகள் அருள்ஜோதி என்ற பியூலா (வயது 23). இவர் பாளை சமாதானபுரத்தில் உள்ள ஒரு தனியார் மி‌ஷன் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் வீட்டில் இருக்கும் போது நர்ஸ் பியூலாவிற்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சுத்தமல்லியில் உள்ள ஒரு டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்றுள்ளார். அதன் பிறகு வயிற்றுவலி குறைந்ததால் தான் பணிபுரிந்த ஆஸ்பத்திரிக்கு நேற்று முன்தினம் மாலை வேலைக்கு சென்றார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து அதிரதனுக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர்கள்,பியூலா வயிற்றுவலி காரணமாக ஆஸ்பத்திரியில் மயங்கி விழுந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனால் அதிரதனும், அவரது குடும்பத்தினரும் பியூலா வேலை பார்க்கும் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு பியூலா சிகிச்சை பலன் இல்லாமல் இறந்தது தெரிய வந்தது. இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    அவர்கள் பியூலா சாவில் மர்மம் இருப்பதாககூறி ஆஸ்பத்திரி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, சப்-இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக மர்மச் சாவு என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து பியூலாவின் உடலை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பினர்.



    அங்கு இன்று நர்ஸ் பியூலாவின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் மரணம் அடைந்த பியூலாவின் உறவினர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் இன்று சமாதானபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி முன்பு திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர். பியூலாவின் மரணத்துக்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என கூறி 2-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள்.

    இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரி முன்பும், ஐகிரவுண்டு பிரேத பரிசோதனை கூடம் அருகேயும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    Next Story
    ×