search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனாட்சி அம்மன் கோவில் ஊழியர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் பரிசு: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்
    X

    மீனாட்சி அம்மன் கோவில் ஊழியர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் பரிசு: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இந்திய அளவில் தூய்மைமிகு தலங்களில் முதலிடத்தை பெற்றுள்ளதற்காக கோவிலில் பணியாற்றும் 276 பணியாளர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
    மதுரை:

    இந்திய அளவில் தூய்மையான தலங்களில் முதலிடத்திற்கான விருதை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பெற்றது. இதற்காக கோவிலில் துப்புரவு பணி மேற்கொண்ட பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் இன்று கோவில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் பாராட்டு விழா நடந்தது.

    மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமி‌ஷனர் அனீஷ்சேகர், கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

    விழாவில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு துப்புரவு ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ்கள் வழங்கினர். கோவில் இணை ஆணையர் நடராஜன் நன்றி கூறினார்.

    பின்னர் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-


    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இந்திய அளவில் தூய்மைமிகு தலங்களில் முதலிடத்தை பெற்றுள்ளது. இதற்காக கோவில் ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். கோவிலில் பணியாற்றும் 276 பணியாளர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    மீனாட்சி அம்மன் கோவிலில் இனிவரும் காலங்களில் மழைநீர் புகாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும். வைகை ஆற்றில் உள்ள மைய மண்டபம் ரூ.75 லட்சம் செலவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விழாவில் கோபால கிருஷ்ணன் எம்.பி., எம்.எல். ஏ.க்கள் ஏ.கே.போஸ், பெரியபுள்ளான், நீதிபதி, சரவணன், மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×