search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகத்தின் நிழல் படிந்திருக்கிறது: ஜி.ராமகிருஷ்ணன்
    X

    ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகத்தின் நிழல் படிந்திருக்கிறது: ஜி.ராமகிருஷ்ணன்

    ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகத்தின் நிழல் படிந்திருக்கிறது என்றும், ஜெயலலிதா மரணம் குறித்து ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகத்தின் நிழல் படிந்திருக்கிறது என்றும், ஜெயலலிதா மரணம் குறித்து ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

    இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜெயலலிதா கடந்த ஆண்டு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, அங்கேயே உயிரிழந்தார். அப்போது அவரது உடல்நிலை குறித்து பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டன. சர்ச்சைகளை எழுப்பியவர்கள் மீது வந்ததி பரப்பியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் மேற்கொண்டார். அப்போது, ஜெயலலிதா மரணம் குறித்து மக்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்களைக் குறிப்பிட்டு, விசாரணை நடத்த வேண்டும் என்று ஊடகங்களில் தெரிவித்தார்.

    தற்போது, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா மரணம் குறித்து பேசியுள்ளார். அதில் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்த காலத்தில் அவரது உடல்நிலை குறித்து தாங்கள் பொய்யான தகவல்களைத் தெரிவித்ததாகவும், அவரைச் சந்திக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் பேசியுள்ளார். மேலும் ஜெயலலிதா கொல்லப்பட்டதாகவும் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

    ஜெயலலிதா தமிழகத்தில் முதல்-அமைச்சராக பதவி வகித்தார். அப்போது அவரின் பாதுகாப்பு குறித்து மத்திய- மாநில அரசுகளின் உளவுத்துறைகள் என்ன செய்தன? ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டு வந்த ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு யாருடைய உத்தரவின் பேரில் விலக்கிக் கொள்ளப்பட்டது? கவர்னர் வித்யாசாகர் ராவ், மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஏன் அமைதி காத்தனர்? அவர்கள் அமைதி காத்ததின் நோக்கம் என்ன? என்ற கேள்விகள் எழுகின்றன.

    பதவியில் உள்ள அமைச்சர்கள் பொய்யான தகவல்களைப் பரப்பியது, தாங்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கும், அரசியலமைப்புக்கும் விரோதமாக செயல்பட்டதாகும்.

    ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்த சமயத்தில் அமைச்சரவை இலாக்காக்கள் மாற்றப்பட்டன. அதிகாரிகள், அமைச்சர்கள் சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது. அவரது கைரேகையைப் பயன்படுத்தி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இப்போது அந்த ஒவ்வொரு முடிவுகளின் மீதும் சந்தேகத்தின் நிழல் படிந்திருக்கிறது. அவர் மரணமடைந்ததை அறிவித்த இரவிலேயே புதிய அமைச்சரவை பதவியேற்றதுடன், இக்காலகட்டம் முழுவதும் பதவியைக் கைப்பற்றவும், பேரத்திற்காகவும் ஜெயலலிதாவின் மரணம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுவருகிறது.

    எனவே, ஜெயலலிதா மரணம் மற்றும் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மத்திய மந்திரிகள், மாநில கவர்னர், மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் விசாரிக்கப்பட வேண்டியுள்ளதால், கோர்ட்டு வழிகாட்டுதலின் அடிப்படையிலான விசாரணைக் குழு அமைக்கப்படவேண்டும். உடனடியாக, பணியில் உள்ள ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில், விசாரணை நடத்தப்படவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×