search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூரில் பருவ மழை மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி
    X

    பெரம்பலூரில் பருவ மழை மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி

    பெரம்பலூரில் அவசர கால மீட்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் சாந்தா முன்னிலையில் நடைபெற்றது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதால் மழைக்காலங்களில் பொது மக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், வெள்ளம், மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை மீட்டெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும், பேரிடர் மேலாண்மை மற்றும் அவசர கால மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் சாந்தா முன்னிலையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் தீயணப்புத்துறையின் மூலம் ஏரி, குளம் மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ரப்பர் படகு (ஒரே சமயத்தில் 10 நபர்களை மீட்கும் திறன்கொண்டது), மீட்பு பணியின்போது 100 மீட்டர் சுற்றளவிற்கு வெளிச்சம் தரவல்ல உயர் கோபுர விளக்கு, உயிர்காக்கும் மிதவை மற்றும் உயிர்காக்கும் உடை (லைப் ஜாக்கெட்), இரும்பு பொருட்களை வெட்ட வல்ல ஹைட்ராலிக் முறையில் இயங்கும் கருவி(ஸ்பெரட்டர் மற்றும் கட்டர்), மிதவை பம்பு (வெள்ள காலத்தில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற), விபத்து நேரங்களில் வாகனங்களின் அடியில் சிக்கியுள்ளவர்களை மீட்க உதவும் (ஏர் லிப்டிங்) ஆகிய பொருட்கள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு அவற்றின் இயக்கம் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    உயரமான கட்டடங்களில் சிக்கியவர்களை மீட்கும் விதம் குறித்து தீயணைப்பு வீரர்கள் மூலம் நேரடி செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையின் மூலம் விபத்து மற்றும் வெள்ள நேரங்களில் பொதுமக்களை காப்பாற்ற, தீயணைப்பு மற்றும் பாதுகாப்புத்துறையினர் மூலம் விபத்தில் நடக்க இயலாத நிலையில் உள்ளவரை விபத்து நடந்த இடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு பல்வேறு முறைகளை பின்பற்றி அழைத்துச் செல்வது குறித்த செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    மேலும் வீடுகளில் சமையல் செய்யும் பொழுது ஏற்படும் தீ விபத்துகளிலிருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது குறித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த பொதுமக்களிடம் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
    Next Story
    ×