search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மலைப்பகுதியில் மழை நீடிப்பு: அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர்வு
    X

    மலைப்பகுதியில் மழை நீடிப்பு: அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர்வு

    மலைப்பகுதிகளில் பெய்துவரும் மழையினால் நெல்லை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் மேலும் அதிகரித்து உள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று செங்கோட்டை, தென்காசி பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் குண்டாறு, ராமநதி, கொடுமுடியாறு பகுதியில் நேற்று சாரல் மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 87.95 அடியாக இருந்தது. இன்று இது மேலும் 1.25 அடி உயர்ந்து 89.20 அடியாக அதிகரித்து உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 728.91 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 354.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 101.31 அடியாக இருந்தது. இன்று இது மேலும் 3 அடி உயர்ந்து 104.85 அடியாக உயர்ந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 624.88 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று 45 அடியாக இருந்தது.

    இன்று இது 45.65 அடியாக அதிகரித்து உள்ளது. இதேபோல நேற்று 66.80 அடியாக இருந்த கடனா அணை நீர்மட்டம் 67.80 அடியாகவும், 70.50 அடியாக இருந்த ராமநதி அணை நீர்மட்டம் 72 அடியாகவும், 57.07 அடியாக இருந்த கருப்பாநதி அணை நீர்மட்டம் 57.75 அடியாகவும், 31 அடியாக இருந்த கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 33 அடியாகவும், 100 அடியாக இருந்த அடவிநயினார் அணை நீர்மட்டம் 100.50 அடியாகவும் உயர்ந்துள்ளன.

    அணைப்பகுதி மற்றும் தாலுகா பகுதிகளில் ராமநதியில் 10 மில்லிமீட்டர் மழையும், குண்டாறு, கொடுமுடியாறில் தலா 5 மில்லிமீட்டர் மழையும், தென்காசியில் 4.6 மில்லிமீட்டர் மழையும்,செங்கோட்டையில் 3 மில்லிமீட்டர் மழையும், சேர்வலாறில் ஒரு மில்லிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. மற்ற இடங்களில் மழை இல்லை.
    Next Story
    ×