search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் கூடுதல் கட்டணம் வசூலித்த 3 மினி பஸ்கள் பறிமுதல்
    X

    திருப்பூரில் கூடுதல் கட்டணம் வசூலித்த 3 மினி பஸ்கள் பறிமுதல்

    திருப்பூரில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்ததாக 3 மினி பஸ்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏராளமான மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் 4 கிலோ மீட்டருக்கு ரூ.3-க்கு பதிலாக ரூ.5 வசூலிக்கப்பட்டு வருவதாகவும், முறைகேடாக கூடுதல் கட்டணத்துடன் கூடிய பயண சீட்டும் அச்சிட்டு பயணிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்தன.

    இந்த புகாரையடுதது திருப்பூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் திருப்பூர் மாநகரத்தில் இயங்கும் மினி பஸ்களை ஆய்வு செய்தனர். திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி சிவகுருநாதன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் விதிகளை மீறிய மினி பஸ்களை ஆய்வு செய்து கூடுதல் கட்டணம் வசூலித்த மினி பஸ்களுக்கு அபராதம் விதித்தனர். அந்த வகையில், மாநகரம் முழுவதும் விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்த 9 பஸ்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் வெள்ளியங்காடு பகுதியில் திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ. முருகானந்தம் தலைமையில் வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தங்கராஜ், பாஸ்கர் ஆகியோர் மினிபஸ்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்ததாக 3 மினி பஸ்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பஸ்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

    பறிமுதல் செய்யப்பட்ட மினிபஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விதிமுறைகளை மீறும் மினி பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×