search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு: நீர்மட்டம் 78.48 அடியாக உயர்வு
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு: நீர்மட்டம் 78.48 அடியாக உயர்வு

    நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 78.10 அடியில் இருந்து இன்று மேலும் உயர்ந்து 78.48 அடியாக உயர்ந்தது.
    மேட்டூர்:

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு கடந்த 2 மாதத்திற்கு மேலாக வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பெய்த கன மழையால் அங்குள்ள கபினி அணை நிரம்பி உள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது.

    இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு 20 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் கரை புரண்டு ஓடுகிறது.

    கூடுதலாக திறக்கப்பட்ட தண்ணீர் நேற்றிரவு தமிழக- கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கலுக்கு வந்த டைந்தது.

    பின்னர் நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை ஒகேனக்கலில் 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கலில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    கர்நாடக அணைகளில் இருந்து கூடுதலாக திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காலை மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. இதனால் நேற்று 5 ஆயிரத்து 553 கன அடியாக இருந்த நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை 6 ஆயிரத்து 479 கன அடியானது. மேலும் நீர் வரத்து இன்று மாலைக்குள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அணைக்கு 6 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வரும் நிலையில் அணையில் இருந்து 2 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 78.10 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 78.48 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்புள்ளது.
    Next Story
    ×