search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலகிரி மாவட்டத்தில் கனமழை: பந்தலூர், கூடலூரில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
    X

    நீலகிரி மாவட்டத்தில் கனமழை: பந்தலூர், கூடலூரில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

    நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுக்காகளில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் இன்று விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.

    கூடலூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் அதிக மழை பெய்தது. தேவாலா பகுதியில் அதிக பட்சமாக 110 மி.மீட்டர் மழை பதிவானது.

    கனமழை மற்றும் கடுங்குளில் காரணமாக இன்று கூடலூர், பந்தலூர் தாலுக்காகளில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் இன்று விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.

    கனமழையால் மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இது தவிர பாண்டியார், பொன்னானி, பொன்னம்புழா ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    ஊட்டி- கூடலூர் சாலையில் மண்சரிவு மற்றும் மரங்கள் சாய்ந்தன. இதனை தேசிய நெடுஞ்சாலைதுறையினர் போர்க்கால அடிப்படையில் சீர் செய்தனர். ஊட்டியில் கனமழை காரணமாக திடீரென உயர் மின் அழுத்தம் ஏற்பட்டது. இதனால் வீடுகளில் இருந்த டி.வி., கம்ப்யூட்டர், செல்போன், மின் விளக்குகள் பழுதானது.

    இன்று காலையும் அடர்த்தியான மேக மூட்டம் நிலவி வருவதால் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தொடர்மழையால் மலைக்காய்கறிகளான கேரட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு தோட்டங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் மழைக்காய்கறிகள் அழுகும் நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மலைக்காய்கறிகளை முன்கூட்டியே அறுவடை செய்து வருகிறார்கள். வரத்து அதிகமானதால் கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.


    கூடலூரில் தேன்வயல் ஆதிவாசி கிராமம் உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவு பெய்த மழையால் வெள்ளம் குடியிருப்புக்குள் புகுந்தன. இது குறித்து தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்ற அங்கு பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்களை அருகில் உள்ள அரசு தொடக்கபள்ளியில் தங்க வைத்தனர்.

    ஊட்டி- மைசூரு சாலையின் 27-வது வளைவில் ராட்சத மரம் சாய்ந்தது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் நள்ளிவில் சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

    கூடலூர், பந்தலூர், தேவாலா ஆகிய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து வீசும் சூறை காற்றால் மரங்கள் பொதுமக்கள் அவதியடைந்தனர். பந்தலூர் அருகே உள்ள தேவாலா அட்டியில் சோழவயல் கிராமத்துக்கு செல்லும் தரைப்பாலம் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டது.

    பெரும்பாலான சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும் இந்த கால நிலையை ரசிக்க சில சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். கனமழையால் ஊட்டியில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. குன்னூர் வெலிங்டன் ராணுவ மையம் மற்றும் கன்டோண்மெண்ட் வாரியம் சார்பில் நடத்தப்படும் வெலிங்டன் ஏரியிலும் படகு சவாரி நிறுத்தப்பட்டது. குன்னூர் சிம்ஸ் பூங்கா படகு இல்ல ஏரியிரும் படகுசவாரி ரத்து செய்யப்பட்டது.

    Next Story
    ×