search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் மற்றும் 4 அமைச்சர்களை தகுதி நீக்கம் செய்ய கோரும் வழக்கில் சபாநாயகர் தனபாலுக்கு நோட்டீஸ்
    X

    முதல்வர் மற்றும் 4 அமைச்சர்களை தகுதி நீக்கம் செய்ய கோரும் வழக்கில் சபாநாயகர் தனபாலுக்கு நோட்டீஸ்

    முதல்-அமைச்சர் மற்றும் 4 அமைச்சர்களுக்கு எதிரான வழக்கில் சபாநாயகரை எதிர்மனுதாரராக சேர்த்து நோட்டீசு அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
    மதுரை:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த அ.தி.மு.க. உறுப்பினர் ஆணழகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

    அதில், முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் தற்காலிக முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதன் பிறகு கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

    இதையடுத்து, உச்சநீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதித்ததையடுத்து, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், 22.2.17 அன்று அ.தி.மு.க.வின் செய்தி தொடர்பாளர் கவுரி சங்கர் அளித்த பேட்டியில், கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவினுடைய ஆலோசனை மற்றும் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசு வழிநடத்தப்படும் என கூறியிருந்தார்.

    இதற்கு எந்த அமைச்சரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து, பிப்ரவரி 28-ந்தேதி அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் கவுரிசங்கரின் பேச்சை உறுதிப்படுத்தும் வகையில், அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் ஆகியோர் சிறைக்கு சென்று சசிகலாவை பார்த்ததாகவும், அரசின் செயல்பாடுகள் குறித்து அவரிடம் பேசியதாகவும் கூறினர். இந்த செயல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 188-வது சரத்துக்கும், அமைச்சராக பொறுப்பு ஏற்கும் போது எடுத்த ரகசிய காப்பு உறுதி மொழிக்கும் எதிரானது.

    இந்த செயல்களுக்கு முதல்-அமைச்சர் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. முதல்வர் மற்றும் அமைச்சர்களின் செயல்கள் அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் வகையில் உள்ளது. அரசும், முதல்வரும் சசிகலாவின் ஆலோசனைப்படி செயல்படுவது தெரிகிறது. இதற்கு அமைச்சர்கள் தூதுவர்களாக உள்ளனர்.

    அரசியலமைப்புச் சட்டப்படிதான் அரசு இயங்க வேண்டும். ஆனால் சசிகலா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளி ஆவார். இதற்காக முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ பதவிகளை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென சபாநாயகருக்கும், சட்டப்பேரவை செயலருக்கும் கடந்த 13, 16-ந்தேதிகளில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே நீதிமன்றம் தலையிட்டு நான் அளித்த மனுவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் வகையில் மனுவை கவர்னருக்கு அனுப்பி வைக்க சபாநாயகருக்கும், சட்டப்பேரவை செயலருக்கும் உத்தரவிட வேண்டும்” கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. சட்டப்பேரவை தலைவருக்கு நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸை வாங்கி கொண்டு பதில் அளிக்காததால் அவரை இந்த வழக்கின் எதிர் மனுதாரராக சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டும் வழக்கின் விசாரணையை செப்டம்பர் 6-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
    Next Story
    ×