search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்வெட்டுகள் மூலம் தெரியவந்த சென்னையின் புகழ்மிக்க துறைமுகங்கள்: ஆராய்ச்சியாளர் தகவல்
    X

    கல்வெட்டுகள் மூலம் தெரியவந்த சென்னையின் புகழ்மிக்க துறைமுகங்கள்: ஆராய்ச்சியாளர் தகவல்

    சென்னையில் புகழ்மிக்க துறைமுகங்கள் இருந்தது கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர் எஸ்.ராஜவேலு கூறினார்.
    சென்னை:

    அரசு அருங்காட்சியக துறை, தொல்லியல் துறை மற்றும் சென்னை 2000 பிளஸ் அறக்கட்டளை சார்பில் ‘சென்னை வட்டாரத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் தொடர் சொற்பொழிவுகள்’ தொடக்க விழா சென்னை அரசு அருங்காட்சியக கலையரங்கத்தில் நேற்று நடந்தது.

    இதில் திருவள்ளூர் மாவட்டம் பட்டரை பெரும்புதூரில் நடந்த அகழ்வாராய்ச்சியின்போது கண்டெடுக்கப்பட்ட 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள், சுடுமண் பானைகள், உடைந்த மண்பாண்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. இதனை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பார்வையிட்டு, தொடர் சொற்பொழிவை தொடங்கிவைத்தார்.

    சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் எஸ்.ராஜவேலு ‘கல்வெட்டுகளில் மதராசபட்டினம்’ என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னை நகரம் 16-ம் நூற்றாண்டுகளில் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது. இது பெரிய துறைமுக நகரமாக இருந்துள்ளது. ‘பாக்கம்’ என்றால் நீர்நிலைகள் நிறைந்த பகுதி என்று அழைக்கப்படுகிறது.

    இவ்வாறு பாக்கம் என்று முடியும் பல இடங்கள் சென்னப்பட்டினத்தில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் அருகில் உள்ள பொன்னேஸ்வர பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால கல்வெட்டில் விஜயநகர மன்னன் ஆட்சியின் படையெடுப்புகள், துறைமுக நகரங்கள் குறித்து தெரியவருகிறது.

    குறிப்பாக நீலகங்கரையான் பட்டினம் (நீலாங்கரை), ராயபுர பட்டினம் (ராயபுரம்), புதுபட்டினம், சதுரவான் பட்டினம் (சதுரங்கப்பட்டினம்), கச்சிராயபட்டினம் என பல பட்டினங்கள் நிறைந்த பகுதிகளில் புகழ்மிக்க துறைமுகங்கள் இருந்தது கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது வியப்பாக உள்ளது.

    சென்னப்பட்டினம் தான் மதராசபட்டினம் என்று மாறி தற்போது சென்னையாக உருவெடுத்துள்ளது. கல்வெட்டுகளில் ஆயம் என்று வரிவசூல் எவ்வாறு செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அண்டார்டிகா தக்‌ஷின் கங்கோத்ரியில் உள்ள இந்திய தென்துருவ ஆய்வுதளத்தின் முன்னாள் தலைவர் கர்னல் பா.கணேசன் கூறியதாவது:-

    உலகிலேயே கொடுமையான குளிரும் (-89.6 டிகிரி செல்சியஸ்), பனிக்காற்றும் (மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகம்) நிறைந்த அண்டார்டிகாவில் என்னுடைய தலைமையில் இயங்கிய இந்திய ஆய்வு குழு 480 நாட்கள் உலகில் எந்தத் தொடர்பும் இல்லாமல் பணி செய்தது சவாலாக இருந்தது.

    அண்டார்டிகாவில் 50 கோடி ஆண்டுகள் உறைபனியில் ஊறிக்கிடந்த ஆயிரம் கிலோ எடையுள்ள 5 கற்பாறைகள் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து எடுத்துவரப்பட்டுள்ளது. இந்த கற்பாறைகளில் ஒன்று எனது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூரிலும் மற்றொன்று அண்ணாநகரில் உள்ள எனது வீட்டிலும் நிறுவப்பட்டுள்ளது. இவற்றை வருங்கால சந்ததியினரும் பார்த்து பயனடைவதற்காக இதனை பாதுகாக்கவும், பராமரிக்கவும் மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் பாடகர் ஸ்ரீநிவாஸ், இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம், வயலின் கலைஞர்கள் லலிதா நந்தினி சகோதரிகள், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் எஸ்.ராஜவேலு, கர்ணல் பா.கணேசன், பேராசிரியர் ராமகிருஷ்ணா ஆகியோருக்கு சிறந்த செயல்பாட்டுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

            விழாவில் வயலின் கலைஞர்கள் லலிதா நந்தினி சகோதரிகளுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விருது வழங்கியபோது எடுத்த படம்

    விழாவில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, அருங்காட்சியகங்கள் துறை மற்றும் தொல்லியல் துறை ஆணையர் டி.ஜெகன்நாதன், சென்னை 2000 பிளஸ் அறக்கட்டளை தலைவர் ஆர்.ரங்கராஜ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக அருங்காட்சியக உதவி இயக்குனர் சேகர் வரவேற்றார். 
    Next Story
    ×