search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டல் உரிமையாளர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
    X

    ஓட்டல் உரிமையாளர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

    பெரம்பலூர் அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் நான்குரோடு அருகே வசித்து வருபவர் அன்புசெழியன் (வயது 50). இவர், பெரம்பலூரில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர், தனது காரை வீட்டின் வெளிப்புறத்தில் நிறுத்தி விட்டு குடும்பத்தினருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென மழை பெய்ய ஆரம்பித்ததால் வெளியே நின்று கொண்டிருந்த காரை எடுத்து வந்து வீட்டின் முன்புறத்தில் (போர்டிகோ பகுதி) ஷெட்டில் நிறுத்தினார்.

    பின்னர் சிறிது நேரத்தில் காரில் இருந்து புகை கிளம்பி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையறிந்த அன்புசெழியன் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து தண்ணீரை ஊற்றி, காரில் பற்றிய தீயை அணைக்க முயன்றார். எனினும் சிறிது நேரத்திலேயே கார் முழுவதும் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் வெப்பத்தை தாங்கி கொள்ள முடியாமல் வீட்டிலிருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்துவிட்டனர். அப்போது காரின் டயர், கண்ணாடி உள்ளிட்டவை வெப்பம் தாங்காமல் வெடித்து சிதறின. இதனால் வீட்டின் முன்புற பகுதி புகைமண்டலமாக காட்சியளித்தது. மேலும் வீட்டின் முன்பக்க சுவரில் இருந்த கண்ணாடிகளும் வெப்பம் தாங்காமல் வெடித்தன. கார் எரிந்து கொண்டிருந்த இடத்தில் வீட்டின் மேற்பகுதி சேதமடைந்தது.

    இதற்கிடையே இது குறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள், எரிந்து கொண்டிருந்த காரின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். மேலும் பெட்ரோல் டேங்கில் நுரை தணிப்பானை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப் படுத்தினர். சுமார் ½ மணி நேர போராட்டத்திற்கு பின்னர் காரில் பற்றிய தீயை முற்றிலுமாக அணைத்தனர். மேலும் அருகிலுள்ள இடங்களுக்கு தீ பரவாமல் தடுத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் கார் முற்றிலுமாக எரிந்து உருக்குலைந்து விட்டது. வீட்டின் முன்புற பகுதியில் வைக்கப்பட்டிருந்த துணி துவைக்கும் எந்திரமும் (வாஷிங் மிஷின்) சேதமடைந்தது.

    பேட்டரி வயர் வெப்பத்தால் இளகி மின்கசிவு காரணமாக அந்த கார் தீப்பிடித்து எரிந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கார் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தின் போது, அன்புசெழியன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து விட்டதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்பிழைத்தது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  
    Next Story
    ×