search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் விழுந்து 2 பள்ளி மாணவர்கள் பலி
    X

    பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் விழுந்து 2 பள்ளி மாணவர்கள் பலி

    கலசபாக்கம் அருகே தண்டவாளம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இரண்டு பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    திருவண்ணாமலை:

    கலசபாக்கம் அடுத்த நாயுடுமங்கலம் முனியப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்த குப்பன் மகன் தங்கதுரை (வயது 7). அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகன் கார்த்திகேயன் (7). நண்பர்களான இருவரும் அங்குள்ள ஊராட்சி ஒன்றியப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    நேற்று மாலை இருவரும் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்கள். பின்னர் இருவரும் வழக்கம்போல் விளையாட சென்றனர்.

    நாயுடுமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்கள் பெய்த மழையால் முனியப்பந்தாங்கல் பகுதியில் உள்ள நாகாத்தம்மன் கோவில் அருகே ரெயில்வே தண்டவாளம் அமைக்க தோண்டப்பட்டிருந்த சுமார் 15 அடி ஆழமுள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நின்றது. இதனை தங்கதுரையும், கார்த்திகேயனும் ஆச்சரியத்துடன் நின்று பார்த்துக்கொண்டிருந்தனர்.

    அப்போது அவர்கள் நின்ற இடத்தில் மண் திடீரென சரிந்ததில் இருவரும் குட்டையில் விழுந்தனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் மழைநீரில் மூழ்கினார்கள்.

    இரவு 7 மணியாகியும் விளையாட சென்ற தங்கதுரை, கார்த்திக்கேயன் வீடு திரும்பி வராததால் அவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இருவரின் பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள் அவர்களை தேடி சென்றனர். நாகாத்தம்மன் கோவில் அருகேயுள்ள பள்ளத்தில் மண் சரிந்திருப்பதை கண்டு சந்தேகம் அடைந்த அவர்கள் அங்கு இறங்கி தேடிப்பார்த்தனர். அப்போது இருவரும் மழைநீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர்.

    இதையடுத்து இருவரின் உடலையும் உறவினர்கள் கைப்பற்றி மேலே கொண்டு வந்தனர். தங்கதுரை, கார்த்திக்கேயன் உடலை கண்டு பெற்றோர், உறவினர்கள், குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    இதுதொடர்பாக கலசபாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×