search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவு எதிரொலி: சென்னையில் 4 புதிய குடும்பநல கோர்ட்டுகள் திறப்பு
    X

    நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவு எதிரொலி: சென்னையில் 4 புதிய குடும்பநல கோர்ட்டுகள் திறப்பு

    நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவு எதிரொலியால் சென்னையில் 4 புதிய குடும்பநல கோர்ட்டுகள் திறக்கப்பட்டுள்ளது, நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் விவாகரத்து வழக்குகள் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    தற்போது பெண்களின் முன்னேற்றம், சுயமாக சம்பாதிக்கும் திறன் ஆகிய வைகளாலும், கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்லாத மனப்பான்மை, சகிப்புத் தன்மை ஆகியவை குறைந்து வருவதாலும், விவாகரத்துக்கு வழக்குகள் அதிக அளவில் கோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்படுகின்றன.

    10 ஆண்டுகளுக்கு முன்பு வரை, சென்னை குடும்பநல கோர்ட்டுகளில், 2 ஆயிரத்துக்கும் குறைவான விவாகரத்து வழக்குகள் மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது 10 ஆயிரத்தை தாண்டி விட்டது. சென்னையில் முதன்மை குடும்பநல கோர்ட்டு, 3 கூடுதல் குடும்ப நல கோர்ட்டுகள் உள்ளன.

    இந்த 4 குடும்பநல கோர்ட்டுகள் மூலம் இந்த வழக்கை விசாரிக்க முடியவில்லை. வழக்குகளின் விசாரணை தள்ளிவைக்கப்படுகிறது.

    இதனால் 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டிய விவாகரத்து வழக்குகள் எல்லாம் 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்து வருகின்றன. இதனால் அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள், தங்களது புதிய வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

    இந்த நிலையில், ஒரு விவாகரத்து வழக்கை ஈரோட்டில் இருந்து சென்னைக்கு மாற்றக் கோரி ஒரு பெண், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், சென்னை குடும்பநல கோர்ட்டுகளில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, முடிவுக்கு வராமல் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருவதும், அந்த வழக்கில் தொடர்புடையவர்கள் ஒரு முடிவு கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுவதையும் கண்டறிந்தார்.

    இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் கூடுதலாக 4 குடும்பநல கோர்ட்டுகளை உருவாக்க வேண்டும் என்று கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசுக்கு நீதிபதி என். கிருபாகரன் உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவின் அடிப்படையில், 4 புதிய குடும்பநல கோர்ட்டுகளை தொடங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதை தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் ஏற்கனவே உள்ள குடும்பநல நீதிமன்ற கட்டிடத்தில், புதிதாக 4 கோர்ட்டுகள் இன்று காலையில் திறந்து வைக்கப்பட்டது.

    இந்த கோர்ட்டுகளை, ரிப்பன் வெட்டி ஐகோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி திறந்து வைத்தார். இதை தொடர்ந்து, புதிய கோர்ட்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகள், வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்கள்.

    இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எஸ்.மணிகுமார், என்.கிருபாகரன், எஸ். விமலா, டி.எஸ்.சிவஞானம், எம்.வி.முரளிதரன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், துணை தலைவர் ஆர்.சுதா, செயலாளர் கிருஷ்ணகுமார், பெண் வக்கீல்கள் சங்கத் தலைவர் எஸ்.நளினி, முன் னாள் தலைவர் பிரசன்னா, சென்னை குடும்பநல நீதிமன்றங்கள் வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் பி.பி.வெங்கடேஷ் உட்பட வக்கீல்கள், கோர்ட்டு ஊழி யர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஏற்கனவே, முதன்மை குடும்பநல கோர்ட்டு, 1-வது, 2-வது, 3-வது கூடுதல் குடும்பநல கோர்ட்டுகள் உள்ளன. தற்போது 4-வது, 5-வது, 6-வது மற்றும் 7-வது குடும்ப நல கோர்ட்டுகள் உருவாக்கப்பட்டு, இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கோர்ட்டுகளுக்கு நீதிபதிகளை நியமித்து ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

    அந்த உத்தரவில், ‘4-வது கூடுதல் குடும்பநல கோர்ட்டு நீதிபதியாக எம்.ஸ்ரீதர், 5-வது கூடுதல் குடும்பநல கோர்ட்டு நீதிபதியாக எஸ்.ரவி, 6-வது கூடுதல் குடும்பநல கோர்ட்டு நீதிபதியாக ராம.பார்த்திபன், 7-வது கூடுதல் குடும்பநல கோர்ட்டு நீதிபதியாக டி.லீலாவதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்’ என்று கூறப்பட்டிருந்தது.

    தற்போது புதிதாக 4 குடும்பநல கோர்ட்டு என்று மொத்தம் 8 குடும்ப நல கோர்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதால், நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் விவாகரத்து வழக்குகள் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×