search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அடுத்தகட்ட மோதல்: காங். - தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவியை நீட்டிக்க கவர்னர் மறுப்பு
    X

    அடுத்தகட்ட மோதல்: காங். - தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவியை நீட்டிக்க கவர்னர் மறுப்பு

    புதுவையில் நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தை அடுத்து காங்கிரஸ் - தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவியை நீட்டிக்க கவர்னர் கிரண்பேடி மறுப்பு தெரிவித்திருப்பது ஆளுங் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி ஆட்சி உள்ளது.

    புதுவை சட்டமன்றத்தில் காங்கிரசுக்கு 15, தி.மு.க.வுக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளது. இதில் முதல்- அமைச்சர் உள்ளிட்ட 6 பேர் அமைச்சர்களாகவும், மற்றும் சபாநாயகர், துணை சபாநாயகர், அரசு கொறடா, முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் என 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவியில் உள்ளனர்.

    மீதமுள்ள 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், 2 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக வாரிய தலைவர் பதவி 3 ஆண்டுகள் வழங்கப்படும். ஆனால் கவர்னர் கிரண்பேடி ஓராண்டுக்கு மட்டுமே வாரிய தலைவர் பதவிக்கு அனுமதி அளித்திருந்தார்.

    இதன்படி கடந்த 7-ந் தேதியுடன் வாரிய தலைவர் பதவி காலம் முடிவடைந்தது. வாரிய தலைவர் பதவிக்கு நீட்டிப்பு வழங்கும்படி அரசு சார்பில் கவர்னர் கிரண்பேடிக்கு கோப்பு அனுப்பப்பட்டிருந்தது.

    முதல்-அமைச்சர், அமைச்சர்களுக்குமான மோதல் போக்கு காரணமாக வாரிய தலைவர் பதவிக்கு நீட்டிப்பு வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கிடையே கவர்னர் கிரண்பேடி வாரிய தலைவர்களின் செயல் திறன் குறித்து அறிக்கை தரும்படி துறை செயலாளர்களுக்கு உத்தரவிட்டார்.

    வாரிய தலைவர்களின் செயல்திறன் அடிப்படையிலேயே பதவி நீடிப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூடி வாரிய தலைவர் பதவிகளை நீடித்து தரும்படி கவர்னருக்கு பரிந்துரை செய்தது.

    வழக்கமாக மாநில கவர்னர்களுக்கு அமைச்சரவை பரிந்துரை செய்தால் அதற்கு அவர்கள் பெரும்பாலும் ஒப்புதல் அளிப்பார்கள். தேவைப்பட்டால் 2 முறை சில விளக்கங்கள் கேட்டு கோப்பை திருப்பி அனுப்பலாம்.

    3-வது முறையாக அமைச்சரவை மீண்டும் சிபாரிசு செய்தால் அந்த கோப்புக்கு கவர்னர் அனுமதி அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதன் அடிப்படையில் புதுவை அமைச்சரவையும் வாரிய தலைவர் பதவி நீட்டிப்புக்கு சிபாரிசு செய்தது.

    ஆனால், புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் துணை நிலை ஆளுநரான தனக்கே முழு அதிகாரம் என கிரண்பேடி கூறி வருகிறார். இதனால் அமைச்சரவை பரிந்துரையை ஏற்பாரா? என்ற கேள்வியும் எழுந்தது.

    ஆனால், தற்போது கவர்னர் கிரண்பேடி வாரிய தலைவர் பதவிக்கு நீடிப்பு வழங்க முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து சமூக வலைதளத்தில் கவர்னர் கிரண்பேடி கூறியிருப்பதாவது:-

    வாரிய தலைவர்கள் நியமனம் நிபந்தனைகள் மற்றும் செயல்திறன் அறிக்கையை பொறுத்தே இருக்கும். இது கடந்த ஆண்டு நியமன கடிதத்தின் ஒரு பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதன் படி இதுவரை எழுத்துப்பூர்வமாக வாரிய தலைவர்கள் செயல்திறன் அறிக்கை வரவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை செயலர் மூலம் கேட்கப்பட்டது. அதன் பிறகும் கவர்னர் அலுவலகத்துக்கு இது தொடர்பான எந்த அறிக்கையும் வரவில்லை. எனவே பதவி நீட்டிப்பு என்பது முழுமையாக நிபந்தனைகளை பின்பற்றியே இருக்கும்.

    இவ்வாறு கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார். இதன் மூலம் செயல்திறன் அறிக்கை கிடைக்காததால் வாரிய தலைவர் பதவி நீடிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

    வாரிய தலைவர் பதவி தொடர்பாக கவர்னரின் இந்த முடிவு ஆளும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எந்த வகையில் பதிலடி தரலாம் என காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆலோசித்து வருகின்றனர்.

    ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகளில் கவர்னர்- அமைச்சரவை இடையே மோதல் நடந்து வருகிறது.

    நியமன எம்.எல்.ஏ. பிரச்சினையில் இந்த மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது. இப்போது வாரிய தலைவர் விவகாரத்தில் அடுத்த கட்ட மோதல் தொடங்கி இருக்கிறது.
    Next Story
    ×