search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை பெய்யாததால் வறண்டு காணப்படும் கல்லட்டி நீர்வீழ்ச்சி
    X

    மழை பெய்யாததால் வறண்டு காணப்படும் கல்லட்டி நீர்வீழ்ச்சி

    கல்லட்டி நீர்வீழ்ச்சி தண்ணீர் இன்றி வறண்டு காட்சி அளிக்கிறது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
    மசினகுடி:

    நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழை காலங்களில் அதிக அளவு மழை பெய்து வந்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகள் நிரம்புவதுடன், நீர்வீழ்ச்சிகளிலும், ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் ஆறுகள் வறண்டு காணபடுவதுடன், நீர்வீழ்ச்சிகளும் தண்ணீர் இன்றி காட்சி அளித்து வருகின்றன.

    குறிப்பாக ஊட்டியில் இருந்து மசினகுடிக்கு செல்லும் வழியில் கல்லட்டி மலைபாதையில் உள்ள கல்லட்டி நீர்வீழ்ச்சி தண்ணீர் இன்றி காணபடுகிறது. மாவட்டத்தில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் முக்கிய நீர்வீழ்ச்சியாக திகழும் இந்த அருவியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டும். இதனை கல்லட்டி மலைப்பாதை வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பதுடன், புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியுடன் செல்வார்கள்.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தொடங்கி இருந்தாலும், மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவு மழை பெய்ய வில்லை. மழை பெய்யாததால் கல்லட்டி நீர்வீழ்ச்சி தண்ணீர் இன்றி வறண்டு காட்சி அளிக்கிறது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதனிடையே அங்குள்ள காட்சி முனை மற்றும் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதை போதிய பராமரிப்பு இன்றி காட்சி அளிக்கிறது. இது நீர்வீழ்ச்சியை காண வரும் சுற்றுலா பயணிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே கல்லட்டி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையையும், காட்சிமுனைக்கு செல்லும் வழியையும் சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×