search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகத்தில் தீபா அணியினர் இன்று மனு
    X

    டெல்லியில் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகத்தில் தீபா அணியினர் இன்று மனு

    எடப்பாடி பழனிசாமி அரசை கலைக்க ஜனாதிபதி, பிரதமர் அலுவலகங்களிலும் உள்துறை அமைச்சகத்திலும் தீபா அணியினர் இன்று புகார் மனு அளித்தனர்.
    சென்னை:

    ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பல்வேறு அணிகளாக இயங்கி வருகிறது.

    ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற முயன்றதாக குற்றம் சாட்டி ஓ.பன்னீர் செல்வம் வெளியில் வந்தார். இதன் பின்னர் சசிகலா அணியினர் தனியாக செயல்பட்டனர். இந்த அணியும் இரண்டாக உடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தனியாகவும், தினகரன் அணியினர் தனியாகவும் செயல்பட்டு வருகிறார்கள்.

    இந்த பரபரப்புக்கு மத்தியில் தீபாவும் அ.தி.மு.க. தீபா அணியை உருவாக்கி அ.தி.மு.க.வை மீட்போம் என்று களம் இறங்கி உள்ளார். நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. என்று கூறி தீபா அணியினரும் வரிந்து கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.

    ஜெயலலிதா வசித்து வந்த போயஸ்கார்டன் இல்லம் உள்ளிட்ட அவரது சொத்துக்கள் தங்களுக்கே சொந்தம் என்று தீபாவும் அவரது சகோதரர் தீபக்கும் கூறி வருகிறார்கள்.



    இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் போயஸ்கார்டன் சென்ற தீபா அங்கிருந்த சசிகலா படங்களை அகற்றினார். இதனால் தனியார் பாது காவலர்களுக்கும், தீபாவுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனை தொடர்ந்து கண்ணீர் மல்க பேட்டி அளித்த தீபா, தமிழகத்தில் என்ன ஆட்சி நடக்கிறது. இங்கு யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டினார். தன்னை கொல்வதற்கு முயற்சி நடந்ததாகவும் தீபா புகார் கூறினார்.

    இது தொடர்பாக போலீசில் தீபா புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமலேயே உள்ளது.

    இதனையடுத்து அ.தி.மு.க. தீபா அணியினர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். உயர் மட்ட குழு உறுப்பினரான வக்கீல் பசும்பொன் பாண்டியன், நிர்வாகிகள் முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதி, ராமச்சந்திரன், வெங்கட் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.

    அங்கு ஜனாதிபதி, பிரதமர் அலுவலகங்களிலும் உள்துறை அமைச்சகத்திலும் இன்று புகார் அளித்தனர்.

    தீபா அணி சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதாகவும், 356-வது பிரிவை பயன்படுத்தி எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தீபாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

    டெல்லி வாழ் தமிழர்கள் மத்தியிலும் தீபா அணிக்கு ஆட்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் இருந்து சென்றிருந்த தீபா அணி நிர்வாகிகள், இது தொடர்பான படிவங்களை டெல்லி அணியை சேர்ந்தவர்களிடம் வழங்கினார்கள்.
    Next Story
    ×