search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுபானக்கூடமாக மாறி வரும் வள்ளுவர் கோட்டம் - முறையாக பராமரிக்க கோரிக்கை
    X

    மதுபானக்கூடமாக மாறி வரும் வள்ளுவர் கோட்டம் - முறையாக பராமரிக்க கோரிக்கை

    சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் மதுபானக்கூடமாக மாறி வருகிறது. இதை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சென்னை:

    சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் மதுபானக்கூடமாக மாறி வருகிறது. இதை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் மிக பிரமாண்டமாக வள்ளுவர் கோட்டம் அமைந்துள்ளது. 1976-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ரூ.99 லட்சம் செலவில் இது அமைக்கப்பட்டது. அப்போதைய ஜனாதிபதி பக்ரூதீன் அலி அகமது இதை திறந்துவைத்தார்.

    இங்கு திருவாரூர் தேரை நினைவுபடுத்தும் வகையில் திருக்குறளின் 133 அதிகாரங்களை சித்திரத்தின் மூலம் விளக்கும் வகையில் சிற்ப தேர் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. தரைதளத்தில் 220 அடி நீளம், 100 அடி அகலத்தில் சுமார் 3 ஆயிரத்து 500 பேர் அமரக்கூடிய தூண்கள் எதுவும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான அரங்கம் உள்ளது. முதல் தளத்தில் குறள் மணி மாடம் அமைந்துள்ளது. இங்கு பளிங்கு கற்களில் திறந்த புத்தக வடிவில் குறள்கள் செதுக்கப்பட்டுள்ளன.



    திருவள்ளுவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டம் தற்போது மதுபானக்கூடமாக மாறி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வார்தா புயலின் போது மரங்கள் சாய்ந்து விழுந்து வள்ளுவர் கோட்டத்தின் சுற்றுச்சுவர் 2 இடங்களில் சுமார் 15 அடி நீளத்துக்கு இடிந்து விழுந்தது.

    தற்போது அந்த இடத்தை மரப்பலகைகளை கொண்டு அடைத்து வைத்துள்ளனர். இருந்தபோதிலும் இரவு நேரங்களில் வெளிநபர்கள் அந்த வழியாக உள்ளே வந்து செல்லும் வகையில் இடைவெளி உள்ளது.

    இதன் வழியாக மர்மநபர்கள் இரவு நேரங்களில் வள்ளுவர் கோட்டத்துக்குள் புகுந்து மதுபானம் அருந்தி வருகின்றனர். இதன்காரணமாக பல இடங்களில் காலி மதுபாட்டில்கள் கிடக்கின்றன. மது அருந்தியவர்கள் விட்டு சென்ற பிளாஸ்டிக் டம்ளர்கள், தண்ணீர் பாக்கெட்டுகளும் ஆங்காங்கே கிடக்கின்றன.

    வள்ளுவர் கோட்டத்துக்கு வந்து செல்லும் வெளிநாட்டினர் மற்றும் பொதுமக்கள் இதை பார்த்து முகம் சுழித்தபடி செல்கின்றனர். திருவள்ளுவரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டம் மதுபானக்கூடமாக மாறி வருவது வேதனை அளிப்பதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

    எனவே, இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் உள்ளே நுழையாத வகையில் வார்தா புயலின் போது இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இதேபோன்று கட்டிடத்தின் சில இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் வகையில் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. கட்டிடத்தின் மேல்தளமும் சேதம் அடைந்துள்ளது. மேல்தளத்தில் தேங்கும் தண்ணீர் வெளியே செல்லும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள சிலாப் முற்றிலும் சேதம் அடைந்து இரும்பு கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டிருக்கின்றன. இந்த கம்பிகள் குழந்தைகளின் கால்களை பதம் பார்த்து விடும் வகையில் உள்ளன.

    இங்குள்ள சுற்றுச்சுவரில் வர்ணம் பூசி பல ஆண்டுகள் ஆகி விட்டன. இதனால் சுவர்கள் மற்றும் சிற்பங்கள் பொலிவு இழந்து காணப்படுகின்றன. தேரில் பிரமாண்டமாக தொங்கி கொண்டிருக்கும் தேர் சீலைகள் வெயில் மற்றும் மழையால் நிறம் மாறி மிக பழமையானது போன்று காட்சி அளிக்கிறது.

    தேர்சீலைகளை அவ்வப்போது மாற்றி புதுமையாக இருக்கும் வகையில் பார்த்துக்கொண்டால் மட்டுமே தேரின் பிரமாண்டம் குறையாமல் இருக்கும் என்று பார்வையாளர்கள் தெரிவித்தனர். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் தனது குறள் மூலம் வெளிப்படுத்திய திருவள்ளுவரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டம் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை ஆகும். 
    Next Story
    ×