search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பருவமழைக்கு முன்பு ஏரிகளில் மண் எடுத்து கொள்ள வேண்டும்: கலெக்டர் அறிவிப்பு
    X

    பருவமழைக்கு முன்பு ஏரிகளில் மண் எடுத்து கொள்ள வேண்டும்: கலெக்டர் அறிவிப்பு

    பருவமழைக்கு முன்பு ஏரிகளில் மண் எடுத்து விவசாயிகள் பயன் பெற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் 73 ஏரிகளும், ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் 305 ஏரிகளும் உள்ளன. இவற்றிலிருந்து விவசாயிகள் தங்களது நன்செய் நிலத்திற்கு ஏக்கருக்கு 75 கன மீட்டர் வரையும், புன்செய் நிலத்திற்கு ஏக்கருக்கு 90 கன மீட்டர் வரையும் வண்டல் மண் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் வண்டல் மண்ணை, விவசாயிகள் தங்கள் நிலத்தில் சீராக பரப்பி சட்டி கலப்பை கொண்டு உழுது நிலத்தை சீர்திருத்தம் செய்துகொள்ளலாம்.

    ஏரிகளில் வண்டல் மண்ணை வைத்து நிலத்தை சீர்திருத்தம் செய்வதால் நிலத்தினுடைய நீர் பிடிப்பு தன்மையானது 15 முதல் 20 சதவீதம் அதிகரிக்கும். ஏரி வண்டல் மண்ணில் இரும்பு மற்றும் துத்தநாக சத்து அதிகமாக இருப்பதால், பயிரின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும், மண் பொள பொளவென்று மாறுவதால் பயிர்களுடைய வேரின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

    இதனால், பயிர்கள் நிலத்திலிருந்து அதிகமான சத்துகளை உறிஞ்சி நன்கு வளரும். ஏரி வண்டல் மண்ணில் நுண்ணுயிர்கள் அதிகளவில் உள்ளதால் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை கிரகித்து பயிருக்கு அளிக்கும். மண்ணில் பயன்படாத நிலையில் உள்ள பாஸ்பரஸ் சத்தை பயிருக்கு கிரகித்து அளிக்கும். இதனால். ரசாயன உரங்களின் தேவையை குறைத்துக் கொள்ளலாம்.

    எனவே, விவசாயிகள் தங்களது கிராமத்திற்கு அருகில் உள்ள பொதுப்பணித்துறை அல்லது ஊராட்சி ஏரிகள் மூலம் வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துச் செல்ல, பொதுப்பணித்துறை ஏரியாக இருந்தால் ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடமும் (வேளாண்மை), ஊராட்சி ஒன்றிய பராமரிப்பு ஏரியாக இருந்தால் உதவி இயக்குநரிடமும் (கிராம ஊராட்சிகள்) விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம். ஏரி வண்டல் மண் அடிக்கப்படுவதை, பருவ மழை தொடங்குவதற்கு முன்பே விவசாயிகள் துரிதமாக செய்து பயனடைய வேண்டும். இத்தகவலை மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்தார்.

    Next Story
    ×