search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அக்னி நட்சத்திரம் நாளை முடிகிறது - வெயில் தாக்கம் குறைந்தது
    X

    அக்னி நட்சத்திரம் நாளை முடிகிறது - வெயில் தாக்கம் குறைந்தது

    மே மாதம் 4-ந்தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் நாளையுடன் முடிவடைகிறது. பல இடங்களில் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து வருகிறது.
    சென்னை:

    இந்திய துணைக் கண்டத்தில் கோடை காலம் தொடங்கியதும் ஏப்ரல், மே மாதங்களில் உச்சகட்ட வெயில் கொளுத்தும். மே மாதத்தில் 4-ந்தேதி கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கி 28-ந் தேதி வரை இருக்கும். இந்த காலத்தில் அக்னியாக வெயில் கொளுத்தும்.

    அக்னி நட்சத்திரம் என்பது தமிழ் வேத சாஸ்திர வல்லுனர்களின் பழங்கால கணிப்பு அதன்படியே இந்த காலத்தில் வெயில் கொடுமை கோர தாண்டவம் ஆடி வருகிறது. ஆனால் நவீன வானிலையில் அக்னி நட்சத்திரமோ, கத்திரி வெயில் என்றோ எதுவும் இல்லை என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். வெப்பம் அதிகமாக இருப்பதால் பல்வேறு இன்னல்கள் ஏற்படும் என்பதால்தான் இந்த கால கட்டத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்த்து வருகிறார்கள்.

    வெப்பம் தணிந்ததும் வைகாசி, ஆனி, ஆவணி போன்ற மாதங்களை சுப நிகழ்ச்சிகளுக்கு தேர்ந்தெடுக்கிறார்கள்.

    இந்த ஆண்டும் அக்னி நட்சத்திரத்தின் போதும் வெயில் 110 டிகிரியை தாண்டி கொளுத்தியது. தமிழ் நாட்டிலேயே அதிகபட்சமாக திருத்தணியில் 113 டிகிரி வெப்பம் பதிவானது.

    இதற்கிடையே வெப்பம் சலனம் காரணமாக தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இடி-மின்னல், சூறாவளி காற்றுடன் கோடைமழை பெய்தது. நேற்று வேலூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல உள்மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது.

    வேலூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்று வட்டாரப்பகுதிகளில் நேற்று மாலை ஆலங்கட்டி (ஐஸ்கட்டி) மழை பெய்தது. சுமார் 1½ மணி நேரம் நீடித்த மழையால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    வறண்டு கிடந்த பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதைப் பார்த்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பில்லூர் என்ற இடத்தில் பாலாற்றின் தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது.

    இந்த ஆண்டு சென்னையில் கோடை மழை இதுவரை சரியாக பெய்யவில்லை. ஓரிரு இடங்களில் லேசாக மழை பெய்த நிலையில் சென்னையின் பெரும்பாலான இடங்களில் மழையே இல்லை. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. குழாய், கிணறுகள் வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    வெப்பச்சலனம் காரணமாக வெளியூர்களில் பெய்த மழையிலும், தரைக்காற்றின் வேகம் குறைந்து கடல் காற்று முன்கூட்டியே வீசத் தொடங்கியதால் சென்னையில் வெப்பம் குறைந்து வருகிறது.

    நாளையுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் மேலும் குறையும். சென்னையில் நேற்றும், இன்றும் வெயில் குறைந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. வெயிலின் அளவும் 100 டிகிரிக்குள் குறைந்தது.
    Next Story
    ×