search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் போராடிய அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளை பாராட்டி கி.வீரமணி சான்று வழங்கிய போது எடுத்தபடம்.
    X
    டெல்லியில் போராடிய அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளை பாராட்டி கி.வீரமணி சான்று வழங்கிய போது எடுத்தபடம்.

    வருகிற 21-ந் தேதி டெல்லியில் போராட்டம் நடத்துவோம்: அய்யாக்கண்ணு

    அனைத்து விவசாயிகளையும் அழைத்து சென்று வருகிற 21-ந்தேதி டெல்லியில் போராட்டம் நடத்துவோம் என தஞ்சையில் நடந்த பாராட்டு விழாவில் அய்யாக்கண்ணு பேசினார்.
    தஞ்சாவூர்:

    விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்திய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் அவருடன் போராடிய விவசாயிகளுக்கு தஞ்சையில் திராவிடர் கழகம், திராவிடர் விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு திராவிடர் கழகத் தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜகிரி தங்கராசு தலைமை தாங்கினார். இதில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., தி.மு.க. தேர்தல் பணிக்குழு தலைவர் எல்.கணேசன், மாநகர செயலாளர் டி.கே.ஜி. நீலமேகம், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விவசாயிகளை பாராட்டினர். பின்னர் அவர் பேசும் போது கூறியதாவது:-

    நாட்டில் உள்ள நதிகளின் நீரை இணைக்கக் கோரியும், தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் போராடிய விவசாயிகளிடம் மத்திய அரசு மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளவில்லை. அதற்கு எல்லாம் விவசாயிகள் பதில் சொல்லும் விதமாக டெல்டாவில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது பாராட்டுக் கூட்டம் மட்டும் அல்ல. அடுத்ததாக அவர்கள் நடத்தும் போராட்டத்துக்கான ஆயத்தக் கூட்டம். இவர்களுக்கு விவசாயிகள் பக்கபலமாக இருக்கின்றனர். அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அவர்களுடைய பணி தொடர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து அய்யாக்கண்ணு பேசும்போது கூறியதாவது:-

    எங்களது உரிமைக்காக பேசினால், நாங்கள் தீவிரவாதி என்றும், எங்களது உரிமையைக் கேட்கக் கூடாது எனவும் கூறுகின்றனர். உச்ச நீதிமன்றம் 7 முறை கூறியும் காவிரி நீர் திறந்துவிடவில்லை. அது பற்றி பிரதமர் கேட்கவில்லை.


    ஆட்சிக்கு வந்தால் விளைபொருளுக்கு இரு மடங்கு லாப விலை தருவதாக கூறிய பிரதமர் அதை செயல்படுத்தவில்லை. அவர் கூறியபடி நதிகளையும் இணைக்கவில்லை, அது பற்றி கேட்டால் நாங்கள் நாட்டின் துரோகிகள் எனக் கூறிகின்றனர். டெல்லிக்கு வருகிற 21-ந் தேதி செல்கிறோம். இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளையும் அழைத்து மாபெரும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×