search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவலாளி கொலை வழக்கு: போலீசாரால் தேடப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் விபத்தில் பலி
    X

    காவலாளி கொலை வழக்கு: போலீசாரால் தேடப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் விபத்தில் பலி

    கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட முன்னாள்முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் பலியானது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    கோவை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கொட நாடு எஸ்டேட் பங்களாவில் காவலாளி ஓம்பகதூர் கடந்த 24-ந்தேதி மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார்.

    அதன் பிறகு அந்த கும்பல் பணம் மற்றும் ஆவணங்களை அள்ளிச் சென்றதாக கூறப்படுகிறது.

    நீலகிரி மாவட்ட போலீசார் 7 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகள் பற்றியும், கொலைக்கான காரணம் குறித்தும் பல கோணங்களில் துப்பு துலக்கி வருகிறார்கள்.

    கொலையாளிகள் தாக்குதலில் கிருஷ்ணபகதூர் என்ற மற்றொரு காவலாளி படுகாயங்களுடன் உயிர் தப்பினார். அவர்தான் நேரில் பார்த்த சாட்சி என்பதால் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

    போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் கேரளாவை சேர்ந்த கூலிப்படையினர் இந்த கொலை-கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.

    கொடநாடு எஸ்டேட்டில் கேமராக்கள் செயல்படாததால் கொள்ளையர்கள் வந்து சென்ற கார்கள் குறித்து தெரியவில்லை.

    எஸ்டேட் பகுதியில் சோதனை செய்தபோது 2 போலி நம்பர் பிளேட், ஒரு கையுறை சிக்கியது. கொள்ளையர்கள் போலி நம்பர் பிளேட்டை கழற்றி வீசி விட்டு சென்றது தெரிய வந்தது.

    கொலை நடந்த 24-ந்தேதி மற்றும் அதற்கு முந்தைய நாளில் கொடநாடு பகுதியில் வந்து சென்ற வாகனங்கள் குறித்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் பஜூரோ, இன்னோவா உள்பட 5 கார்கள் வந்து சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த கார்கள் பதிவான சி.சி.டி.வி. காட்சிகளை உயிர் தப்பிய காவலாளி கிருஷ்ண பகதூரிடம் காட்டினர். அவர் கொள்ளையர்கள் வந்து சென்றதாக பஜூரோ, இன்னோவா காரை அடையாளம் காட்டினார். அந்த கார்களின் பதிவு எண்ணை போலீசார் கண்டுபிடித்தனர்.

    கிருஷ்ணபகதூர் கொடுத்த தகவலின் அடிப் படையில் போலீசார் கம்ப்யூட்டர் உதவியுடன் கொலையாளியின் உருவப்படத்தை வரைந்து வெளியிட்டனர்.

    அதை தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்கள், கர்நாடகா, கேரளா மாநில போலீசாருக்கும் அனுப்பி வைத்தனர்.

    போலீசாரை திசை திருப்ப கொலையாளிகள் சென்னை, கேரளாவுக்கு 2 பிரிவாக தப்பியது தெரிய வந்தது. உடனே போலீசார் கேரளா சென்று திருச்சூரை சேர்ந்த சந்தோஷ், சதீசன், சிபு ஆகிய 3 பேரை மடக்கி பிடித்தனர்.

    இவர்கள் கொடநாடு கொலை சம்பவத்தில் கூலிப்படையாக செயல்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் மலப்புரத்தில் 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    அவர்கள் 6 பேரையும் ஊட்டிக்கு நேற்று நள்ளிரவு போலீசார் அழைத்து வந்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே இந்த கொலை-கொள்ளை சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவரான கனகராஜ் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

    கனகராஜ் ஜெயலலிதாவிடம் 2 வருடங்கள் கார் டிரைவராக பணியாற்றினார். ஜெயலலிதாவுடன் கொடநாடுக்கு வந்துள்ளார். அந்த வகையில் கொடநாடு பங்களா பற்றிய முழு விவரங்களும் இவருக்கு அத்துபடியாக இருந்தது.

    இந்த நிலையில் ஜெயலலிதாவின் பெயரை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால் கடந்த 2012-ம் ஆண்டு அவரை பணியில் இருந்து நீக்கி விட்டனர்.

    தற்போது ஜெயலலிதா மறைவுக்கு பின்பு கொடநாட்டில் உள்ள அவரது சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் தீட்டி இருக்கிறார்.

    இந்த திட்டத்திற்கு அவரது நண்பரான கோவையை சேர்ந்த சயன் என்பவர் உதவி உள்ளார். கோவை குனியமுத்தூரில் பேக்கரி ஒன்றில் வேலைபார்த்து வந்த சயனுக்கு சொந்த ஊர் கேரள மாநிலம் திருச்சூர் ஆகும்.

    கனகராஜ் வகுத்து கொடுத்த திட்டத்தை சயன் கேரளாவில் உள்ள கூலிப்படை உதவியுடன் அரங்கேற்றி இருக்கிறார்.

    இதனைதொடர்ந்து கனகராஜ், சயன் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். கனகராஜை தேடி ஒரு தனிப்படை சென்னைக்கு விரைந்தது.

    போலீசார் நெருங்குவதை தெரிந்து கொண்ட கனகராஜ் நேற்று சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு தப்பி சென்றார். இதை அறிந்த தனிப்படை போலீசார் சேலத்துக்கு விரைந்தனர்.

    போலீசார் நெருங்கியதை உணர்ந்த கனகராஜ் சரண் அடைய முடிவு செய்தார். நேற்று இரவு நண்பர் ஒருவரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் போலீசாரிடம் சரண் அடைய சென்றார்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசுகார் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கனகராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    கொடநாடு வழக்கில் மூளையாக செயல்பட்ட கனகராஜ் விபத்தில் மர்மமாக பலியானது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது உண்மையிலேயே நடந்த விபத்தா? அல்லது அவரை கொல்வதற்காக காரை விட்டு மோதினார்களா? என்ற சந்தேகம் போலீசுக்கு ஏற்பட்டுள்ளது.

    பலியான கனகராஜூக்கு கலைவாணி என்ற மனைவியும், 1 வயது பெண் குழந்தையும் உள்ளனர். தப்பியோடிய சயனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையே கொடநாடு கொலை சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜிக்கு உதவிய கேரளாவை சேர்ந்த சயன் நேற்று குடும்பத்துடன் காரில் கேரளாவுக்கு தப்பி செல்வதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் கோவை-திருச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து சென்றனர். அப்போது பாலக்காடு நகரில் கண்ணாடி என்ற பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் நின்றிருந்த ஒரு கண்டெய்னர் லாரியில் கார் மோதி விபத்துக்குள்ளானதும் அதில் ஒரு பெண், ஒரு குழந்தை இறந்து கிடப்பதாகவும், வாலிபர் படுகாயத்துடன் உயிருக்கு போராடுவதாகவும் தகவல் கிடைத்தது.


    விபத்தில் சிக்கிய சயன் - பலியான வினுபிரியா

    இதைதொடர்ந்து போலீசார் சென்று பார்த்த போது விபத்தில் சிக்கியது கொடநாடு கொலையில் தேடப்படும் சயன் என்பது தெரிய வந்தது. மேலும் விபத்தில் இறந்தது அவரது மனைவி வினுபிரியா , மற்றும் 6 வயது மகள் நீலு என்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த சயனை போலீசார் சிகிச்சைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×