search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்
    X

    வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்

    சிரிக்கக் கற்றுக் கொண்டால் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்கிறார்கள் சிரிப்பு குறித்து ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள்.
    எந்த விலங்கினமும் சிரிப்பது இல்லை. சிரிப்பு என்பது மனிதர்களுக்கு மட்டுமே இயற்கை கொடுத்த கொடை. போட்டி, பொறாமை, பணிச்சுமை, கடன், நோய் என்று சுற்றிச்சுழலும் பிரச்சினைகளால் மனிதர்கள் பலருக்கு சிரிப்பு என்பதே மறந்து போய் விட்டது. சிரிக்கக் கற்றுக் கொண்டால் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்கிறார்கள் சிரிப்பு குறித்து ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள்.

    தினமும் சிறிது நேரம் சிரிக்கக் கற்றுக் கொண்டால் டாக்டர்களிடம் போக வேண்டிய அவசியம் இருக்காது என்பது அவர்களது ஆராய்ச்சி முடிவு. தினமும் வயிறு குலுங்க 10 நிமிடங்கள் சிரித்தால் அட்ரினல் சுரப்பிகள் ஊக்குவிக்கப்படும். இதனால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். மேலும், உடல் சார்ந்த வலிகள் அனைத்தும் பறந்து போய் விடும் என்கிறார்கள் அவர்கள். மேலும் சிரிக்கும் போது மூளையின் அடியில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி தூண்டப்படுகிறது. இதனால் மூளையில் உள்ள ரத்தக் குழாய்கள் தூண்டப்பட்டு மூளையின் அனைத்து பகுதிகளுக்கும் நல்ல ரத்த ஓட்டம் கிடைத்து மூளை புத்துணர்ச்சி பெறுகிறது.

    நகைச்சுவையாக பேசிக்கொண்டிருந்து விட்டு சாப்பிட சென்றால் செரிமானம் சிறப்பாக நடைபெறுகிறது. அன்றாடம் வாய் விட்டு சிரிப்பவர்களுக்கு குடல் சார்ந்த கோளாறுகள் வராது. குறிப்பாக, மலச்சிக்கல் எளிதாக நீங்கி விடுமாம்.

    உடலில் அதிக எடை போட்டு குண்டாக தோற்றமளிப் பவர்களை தற்போது அதிக அளவில் காண முடிகிறது. பெரும்பாலும் இவர்கள் மன அழுத்தத்தால் தவிப்பவர்களாகவே இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. மன அழுத்தத்தை போக்க எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பது இவர்களது இயல்பு. அதிகரித்துவிட்ட உடல் எடையைக் குறைக்க சிரிப்பு ஒரு வரப்பிரசாதம்.

    நன்றாக சிரித்து கலகலப்பாக இருப்பவர்களுக்கு உடலில் கொழுப்பு சேராது. உடலில் தேவையில்லாத சதை உருவாகாது. மாரடைப்பு இப்போது 30 வயதில் கூட வருகிறது என்கிறது மருத்துவ ஆய்வுகள். பிரச்சினைகளை எளிதாக சிரித்துக் கொண்டே எதிர்கொண்டால் இருதயமும் மகிழ்ச்சியாக இருக்கும். மாரடைப்பு வருவதை குறைக்கலாம் என்றும் சொல்கிறார்கள் சிரிப்பு ஆராய்ச்சியாளர்கள்.

    ‘சிரிச்சே காரியத்தை சாதித்து விடுவான்’ என்று சொல்வார்கள். இன்முகமும், சிரித்த அணுகுமுறையும் இருந்தால் எந்த வேலையையும் சாதித்து விடலாம் என்பதே இதன் பொருள். ஆக, உடலும் மனமும் இனிதாக இப்போதே சிரிக்கத் தொடங்குங்கள். சிரிப்பு வரவில்லையா. நல்ல நகைச்சுவை நடிகர்களின் படங்களை பார்த்தால் சிரிப்பு கைவசம் ஆகும்.
    Next Story
    ×