search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தூக்கத்தில் நடக்கும் வியாதி
    X

    தூக்கத்தில் நடக்கும் வியாதி

    தூக்கத்தில் நடப்பவர்கள் நடக்கத் தொடங்கும் போது அந்த நடையை தடுக்கும் விதமாக ஏதாவது தடை ஏற்பட்டால் அவர்களது கனவு தடைப்பட்டு நடப்பதை நிறுத்திவிடுவார்கள்.
    சிலருக்கு தூக்கத்தில் நடக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுவதை கேள்விப்பட்டிருப்போம். இரவானதும் படுக்கைக்கு செல்லும் ஒருவர் தூங்கத் தொடங்குவார். தூங்கும்போது மனது கனவு காணத் தொடங்கும். அப்போது கனவில் மூழ்கி இருக்கும் அந்த நபர் படுக்கையை விட்டு எழுந்து நடக்கத் தொடங்கி விடுவார். ஆனால் தான் இவ்வாறு எழுந்து நடந்து செல்வதை பற்றிய சரியான உணர்வு நிலை அந்த நேரத்தில் அந்த நபருக்கு இருப்பதில்லை.

    இதையே கனவு நிலையில் தூக்கத்தில் நடக்கும் வியாதி என்கிறது, மருத்துவ உலகம். தூக்கத்தில் நடக்கும் பழக்கம் உள்ளவர்கள் பல மைல் தூரத்திற்கு எல்லாம் நடந்து போவதில்லை. அதிகபட்சமாக தான் படுத்து உறங்கும் அறையில் இருந்து பக்கத்து அறை வரை மட்டுமே நடந்து போவார். அனைவருக்குமே கனவு வருவது இயல்பு தான் என்றாலும், சிலருக்கு மட்டும் கனவில் இதுபோல் நடக்கும் பிரச்சசினை இருக்கிறது.



    பொதுவாக கனவு என்பது நம் மனதில் தேங்கிக்கிடக்கும் நிறைவேறாத ஆசை, துக்கம், எண்ணங்கள் போன்ற வற்றின் வடிகால் என்பது தான் உளவியல் அறிஞர்களின் கருத்தாக உள்ளது. சாதாரணமாக நாம் நடப்பது போல் கனவு கண்டால் அது கனவில் மட்டுமே நடந்து கனவிலேயே முடிந்து விடும். ஆனால் தூக்க நடைக்காரர்களுக்கு கனவில் நடப்பது போல் கனவு வந்தால் உண்மையிலேயே நடப்பார்கள்.

    அப்படி அவர்கள் தூக்கத்தில் நடக்கத் தொடங்கும் போது அந்த நடையை தடுக்கும் விதமாக ஏதாவது தடை(வீட்டின் கதவு, சுவர், மேசை) ஏற்பட்டால் அவர்களது கனவு தடைப்பட்டு நடப்பதை நிறுத்திவிடுவார்கள். பின்னர் எதுவுமே நடவாதது போல் மீண்டும் படுக்கைக்கு போய் படுத்துவிடுவார்கள். பொதுவாக ஒருவருக்கு ஆழ்மனதில் ஏற்படும் பாதிப்பு தான் இதுபோன்ற தூக்கத்தில் நடக்கும் வியாதி ஏற்படுவதற்கான காரணம் என்கிறார்கள், மருத்துவர்கள்.

    மனித மனம் எதையும் தொடர்ந்து நினைவு வைத்துக் கொள்வதில்லை. அதுபோல் தூக்க நடையும் சம்பந்தப்பட்ட நபருக்கு மறுநாள் மறந்து போய்விடுகிறது.
    Next Story
    ×