search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெற்றோர்களே குழந்தைகளோடு விளையாடுங்கள்
    X

    பெற்றோர்களே குழந்தைகளோடு விளையாடுங்கள்

    பெற்றோராக குழந்தைகளோடு விளையாடுவது நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான பணிகளில் ஒன்று.
    குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தை வீண் என்று ஒரு போதும் நினைக்க வேண்டாம் என்கிறார்கள், மனநல மருத்துவர்கள். விளையாட்டு ஒரு மகிழ்வான விஷயம் என்பதோடு ஈடுபாட்டையும் ஊக்குவிக்கக் கூடியது. பலன்களை அடைவதில் சிந்தித்தலை விட செயல்படுதல் மிகவும் முக்கியமான ஒன்று. பெற்றோராக குழந்தைகளோடு விளையாடுவது நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான பணிகளில் ஒன்று.

    விளையாட்டு, குழந்தைகளுக்கு மட்டுமின்றி, பெரியவர்களுக்கும் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகும். குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிடுவோர் அதன் மூலம் வாழ்வில் நல்ல மாற்றங்கள் நிறைய ஏற்படுவதாக நம்புகின்றனர். இது உங்களை இளைப்பாறச் செய்யும், ஊக்கம் கொள்ளச் செய்யும். குழந்தைகளுடன் விளையாடுவது மகிழ்ச்சியைத் தருவதால் மனம் புத்துணர்ச்சி பெற்று சோர்விலிருந்து விடுபடுவோம்.

    இந்த விளையாட்டுகள் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் உடல் திறனையும், அறிவு மற்றும் உணர்வு திறனையும் மேம்படுத்துகின்றன. குழந்தைகளுடன் நேரம் செலவிடும் போது, அவர்களுடைய மகிழ்ச்சியான பொழுதுகளில், அவர்கள் கற்றுக் கொள்ளவேண்டியவற்றை திணிக்க முயலாதீர்கள். குழந்தைகளின் செய்கைகளை அவர்களே கட்டுப்படுத்திக் கொள்ளவும், முடிவெடுக்கவும், அனுமதியுங்கள்.



    குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தில் நீங்கள் பொறுமையையும், புரிதலையும், கற்றுக்கொள்வதற்கு இது ஒரு முக்கிய பங்காற்றுகிறது. குழந்தைகளுடன் விளையாடும்போது ஏற்படும் பந்தம் நெடுநாள் வரை நீடித்திருக்கும். இது தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் கவலைகளை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். கடும் மன நெருக்கடியில் உள்ள பெரியவர்களுக்கு, குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தின் போது மன அழுத்தம் பெருமளவு குறைகிறது.

    குழந்தைகள்-பெரியவர்கள் இடையே காணப்படும் சமூக, உணர்வு சார்ந்த நடத்தைகள், அவர்களிடையே காணப்படும் பந்தம் ஆகியவற்றில் ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் முக்கிய பங்கு வகிக்கிறது, அது மனதிற்கு ஆறுதலையும் அமைதியையும் தருவதாகக் கருதப்படுகிறது. குழந்தைகளுடனான விளையாட்டு மனத்திற்குத் தெம்பைத் தருவதோடு மட்டுமல்லாமல் மேலும் சுறுசுறுப்படையச் செய்கிறது.

    ஒரே இடத்தில் அசையாமல் இருந்து கொண்டோ அல்லது டி.வி.யை பார்த்துக் கொண்டோ இருப்பவர்களுக்கு அந்தப் பழக்கத்திலிருந்து வெளியே வரவும் இது உதவுகிறது. உங்கள் கற்பனைத் திறனை தூண்டி புதிய சிந்தனைகளை வாழ்வில் புகுத்துகிறது. இது மன ஆரோக்கியத்தை மேம்பட வைக்கிறது. நாம் வளர வளர மெல்ல விளையாடுவதைக் குறைத்து விடுவோம் எனினும் விளையாட்டு உங்களை இளமையாகவும் மூளையை சுறுசுறுப்பாகவும் வைக்க உதவும்.
    Next Story
    ×