search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு பெற்றோரே நம் முதல் இறைவன்
    X

    குழந்தைகளுக்கு பெற்றோரே நம் முதல் இறைவன்

    பெற்றோர் நம் வாழ்வின் மாபெரும் கொடை. அவர்கள் இல்லை எனில் இம்மண்ணிலே நாம் ஒரு மனிதன் இல்லை என அறிவோம். பெற்றோரே நம் முதல் இறைவன் என உணர்வோம்.
    அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்பது உண்மையே. தாயும், தந்தையும் தான் நம்மை இந்த தரணி காண செய்தவர்கள். அவர்களே நம் முதல் தெய்வம். பெற்றோர் தம் குழந்தைகளை சிறுவயது முதல் பெரியவனாகும் வரை தங்களின் அரவணைப்பில் வளர்த்து ஆளாக்குகின்றனர். பேச கற்றுத் தருகின்றனர். நடக்கக்கற்று தருகின்றனர். மொத்தத்தில் நமக்கு முதல் ஆசான் அன்னை, தந்தையே என்பதில் ஐயமில்லை.

    அனைத்துக்கும் மேலான கேடில் விழுச்செல்வமான கல்வியை கற்பதற்கு பள்ளியில் சேர்த்து விடுகின்றனர். அறிவே ஆற்றல் என்பதை உணர்த்துகின்றனர். பள்ளிப்படிப்போடு நிறுத்திவிடாமல் மேற்படிப்பையும் தருகின்றனர். ஒழுக்கம் விழுப்பம் தரும். ஆம், பெற்றோர்கள் உயிரினும் மேலான ஒழுக்கத்தை நமக்கு போதிக்கின்றனர். பின்னர் வேலைவாய்ப்பு, நல்ல வாழ்க்கைத்துணை ஆகியவற்றை அமைத்து நம்மை ஒய்யாரமாய் வாழ வைத்து நம் வாழ்வில் ஓடமாய் இருக்கின்றனர்.

    இதற்கான நன்றி கடனை பெற்றோருக்கு செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவர் கடமை. ஆனால் இன்றைய இளைஞர்களோ வாழ்வில் நல்ல நிலையை எய்தியவுடன் ஏற்றிவிட்ட ஏணியை எட்டி மிதிக்கின்றனர். அதாவது பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுகின்றனர். இது மிகப்பெரிய மூடத்தனம். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை மறந்து தனிக்குடும்பமாக வாழ நினைத்து அவ்வாறே வாழ்கின்றனர்.

    அது மட்டுமின்றி பெற்றோர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளாத பிள்ளைகளாக வாழ்ந்து வருபவர்களும் உண்டு. நாகரிகம் எனும் பெயரில் பெற்றோரை உதாசீனப்படுத்துகின்றனர். நாளை தன் குழந்தைகளால் தனக்கும் இந்நிலை தான் என்பதை உணரவில்லையா? குழந்தைகள் செய்யும் எந்த தவறையும் பெற்றோர் மன்னித்து மறந்துவிடுகின்றனர்.

    இப்பண்பில் அவர்கள் ஆண்டவனுக்கு நிகரான பெற்றோருக்கு அன்பையே காணிக்கையாய் செலுத்தவேண்டும். பெற்றோரே நம் கண்கள். நம் கண்களை நாம் தான் பாதுகாக்கவேண்டும். இறைவனிடம் தன் குறையை முறையிடும் அனாதை சிறுவனின் நிலையை உணர்ந்தால் நம் பெற்றோர் நமக்கு பேரின்பமாய் தெரிவர். பெற்றோர் நம் வாழ்வின் மாபெரும் கொடை. அவர்கள் இல்லை எனில் இம்மண்ணிலே நாம் ஒரு மனிதன் இல்லை என அறிவோம். பெற்றோரே நம் முதல் இறைவன் என உணர்வோம்.

    வெயிலை எண்ணிப்பார் மரத்தின் அருமை தெரியும்

    அனாதைகளை எண்ணிப்பார் பெற்றோரின் அருமை தெரியும்.

    பெற்றோரை பேணுவோம். பேறுகள் பல பெறுவோம்.
    Next Story
    ×