search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளின் ஆற்றலையும், கற்பனை வளத்தையும் அதிகப்படுத்தும் கதைகள்
    X

    குழந்தைகளின் ஆற்றலையும், கற்பனை வளத்தையும் அதிகப்படுத்தும் கதைகள்

    கதைகள் குழந்தைகளின் சிந்தனை ஆற்றலையும், கற்பனை வளத்தையும் அதிகப்படுத்தும் ஆற்றல் மிக்கவை. நீதிக்கதைகள் சொல்வது குழந்தைகளை நல்வழிப்படுத்தும்.
    கதை சொல்லி குழந்தைகளை தூங்க வைக்கும் பாட்டிகள் குறைந்து போய்விட்டார்கள். செல்போன் கேம்களில் மூழ்கிய நிலையில் குழந்தைகளை தூங்க வைக்கும் அம்மாக்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். பாட்டிகள் குழந்தைகளுக்கு கதை சொல்வது அவர்களை தூங்க வைப்பதற்காக மட்டுமே அல்ல. கதைகள் குழந்தைகளின் சிந்தனை ஆற்றலையும், கற்பனை வளத்தையும் அதிகப்படுத்தும் ஆற்றல் மிக்கவை.

    கதையில் இடம்பெறும் சம்பவங்கள் அவர்களின் ஆழ்மனதில் காட்சி பதிவுகளாக விரியும். ஒவ்வொரு நிகழ்வுகளையும் உன்னிப்பாக கேட்பார்கள். கதாபாத்திரங்களோடு எளிதில் ஒன்றியும் போய்விடுவார்கள். சந்தேகம் எழுந்தால் குறுக்கு கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்திக்கொள்வார்கள். அது அவர்களின் சிந்தனை திறன்மேம்படுவதற்கு வழிகாட்டியாக அமையும்.

    குழந்தைகளை சிந்திக்க வைப்பதற்கு கதை சொல்வது அவசியமென்பதால், அவர்கள் எதை ஆர்வமாக கேட்கிறார்களோ அதை அப்படியே மனதில் ஆழமாக பதியவைத்துவிடுங்கள். இரவில் கதை கேட்டுக்கொண்டே தூங்கும் குழந்தைகள் மனதில் அதில் இடம்பெறும் சம்பவங்கள் ஆழ்மன பதிவாக இடம்பெற்றுவிடும். அதனால் நீதிக்கதைகள் சொல்வது குழந்தைகளை நல்வழிப்படுத்தும்.



    அக்கதைகளில் இடம் பெறும் கருத்துக்கள், போதனைகள் அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும். பெரியவர்களிடம் மரியாதையாகவும், தன்னடக்கத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்ற படிப்பினையை கற்றுத்தரும். கதையில் இடம் பெறும் சம்பவங்களை மனதுக்குள் அசைபோட்டு பார்க்கும்போது வாழ்க்கைக்கு தேவையான அனுபவங்களையும் கற்றுக்கொடுக்கும்.

    கதைகளை கேட்டு அதன் சாரம்சங்களை சிந்திக்கும்போது பல்வேறு வகையான அனுபவங்கள் குழந்தைகளுக்கு கிடைக்கும். கதையில் தவறான வழியில் செல்பவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்ற நியதி வலுவாக முன்வைக்கப்படும் என்பதால் நல்ல, கெட்ட விஷயங்களை எளிதில் சீர்தூக்கி பார்க்கும் பக்குவம் குழந்தைகளுக்கு கிடைக்கும்.

    கதைகளில் சொல்லப்படும் நீதியை நிஜ வாழ்க்கை சம்பவங்களோடு ஒப்பிட்டு பார்க்கவும் தொடங்குவார்கள். ஆதலால் முன்னோர்கள் கையாண்ட கதை சொல்லும் யுக்தியை பெற்றோர் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க முன்வர வேண்டும். இப்போது இணைய தளங்களில் நீதிக்கதைகள் குவிந்திருக்கின்றன. அவைகளை சுருக்கமாக குழந்தைகளிடத்தில் கூறி நல்ல நீதி கருத்துக்களை விதைக்க வேண்டும்.
    Next Story
    ×