search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகள் ஏன் சில நேரங்களில் பால் குடிக்க மறுக்கிறது
    X

    குழந்தைகள் ஏன் சில நேரங்களில் பால் குடிக்க மறுக்கிறது

    பிறந்த குழந்தை தாய்ப்பால் குடிக்கவில்லையென்றால் என்பதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளது. இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
    குழந்தை பால் குடிக்கவில்லையென்றால் அது தாய்மார்களுக்கு பெரும் கவலையை உண்டாக்கும். ஏன் உங்கள் குழந்தை பால் அருந்தவில்லை என்பதற்கு ஏராளமான காரணங்களை பட்டியலிடலாம்.

    உங்கள் குழந்தைக்கு பால் மட்டுமே ஆகாரமாக இருந்து, அதனை குழந்தை குடிக்க மறுத்தால் நீங்கள் குழந்தை நல மருத்துவரை உடனே அணுகுதல் மிகவும் முக்கியம். கைக்குழந்தை பால் குடிக்க மறுக்கும் சூழல் பெற்றோருக்கு பிரச்சனை அளிப்பதாகவும், மிகுந்த சவாலாகவும் இருக்கும். இத்தகைய சூழல் திடீரென உருவாகி இருக்குமானால், ஏதேனும் பிரச்சனை என்றோ, உங்கள் குழந்தை ஏதோ அசௌகரியமாக உணர்ந்துள்ளது என்றோ அர்த்தம்.

    அதனாலேயே அது பால் அருந்த மறுத்திருக்கலாம். ஆனால் இத்தகைய சூழல் பிறப்பிலிருந்தே நிலவி வருமானால், குழந்தைக்கு தாயின் மார்பிலிருந்து பால் அருந்துவதில் ஏதோ அசௌகரியம் இருப்பதாகவே அர்த்தம். சில வேளைகளில் பிறந்தவுடன் தாயின் முளைக்காம்பைப் பற்றி பால் அருந்தும் செயலைத் தொடங்குவது குழந்தைக்கு சிரமமாக இருக்கும். சில சமயங்களில் முதல் சில தடவைகளில் சாதாரணமாக பால் அருந்திய குழந்தை போகப் போக அது பால் அருந்த கற்றுக்கொள்ளும் சமயத்தில் சில நேரம் பால் அருந்த மறுக்கலாம்.

    குழந்தை பிறப்பில் இருந்து பால் புகட்டுவதில் எவ்வித பிரச்சனைகளும் இன்றி பல நாட்கள் கழிந்த பின்னரும் கூட இப்பிரச்சனை எழலாம். இதற்குப் பின்னணியில் இருக்கக்கூடிய காரணங்கள் நிறைய உள்ளன. உங்களின் குழந்தை பால் அருந்த மறுப்பதற்கு இவற்றுள் எது காரணமாக உள்ளது என்பதைக் கண்டறிந்தால் தான் அதனை நீங்கள் சரிப்படுத்த முடியும்.



    குழந்தை ஏன் பால் குடிக்கவில்லை என்பதற்கான சில காரணங்கள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன.

    சில சமயங்களில் கைக்குழந்தைகள் பால் புகட்டும் போது மூச்சு விடுவதற்கு சிரமப்படுவார்கள். பாலை உறிஞ்சிக் குடித்து முழுங்குவதற்கு மிகவும் சிரமமாக இருப்பதனால் பால் அருந்த மறுப்பார்கள்.

    சில குழந்தைகள் தங்கள் வாய்க்கு ஒவ்வாத காரணத்தினால் எதையுமே வாய் மூலம் உட்கொள்ள விரும்பாமல் பால் அருந்த மறுப்பர்.

    குழந்தைகள் குறிப்பிட்ட வகை மற்றும் முறையில் பால் புகட்டுதலை விரும்புவார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இம்முறையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அவர்கள் பால் அருந்த மறுப்பர்.

    நோய்தொற்றினால் காதில் ஏற்படக்கூடிய வலி அல்லது வேறு ஏதேனும் அசௌகரியம் காரணமாக குழந்தை அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம். குழந்தைகள் தங்களின் அவஸ்தையை அழுகையின் மூலமும், பால் அருந்த மறுப்பதன் மூலமுமே பெரும்பாலும் வெளிப்படுத்துவர்.



    வயிற்றுப் பிடிப்பினால் உண்டாகும் வலியினால் அவதிப்படும் பெரும்பாலான குழந்தைகள் அழுவார்கள். அவர்களை சமாதானப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும். இது பொதுவாக அஜீரணக் கோளாறு, உணவு வகைகளுக்கு கூரிய உணர்வுத் திறனுடன் இருத்தல் அல்லது வேறு ஏதேனும் காரணத்தினாலேயே ஏற்படுகிறது.

    உங்கள் குழந்தை பால் அருந்த மறுத்து, அதற்கான காரணத்தை கண்டறிய இயலவில்லை என்றால், உங்கள் குழந்தைக்கு பாலின் மீது ஒவ்வாமை உள்ளதா இல்லையா என்பதை சோதியுங்கள். சில வேளைகளில் உங்கள் குழந்தைக்கு பாலின் மீது ஒவ்வாமை இருக்கக்கூடும்; அதனாலேயே கூட உங்கள் குழந்தையினால் பால் அருந்த இயலாமல் போகலாம்.

    சில நேரங்களில் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம். அதனால் கூட பால் அருந்த மறுக்கலாம். உண்மையில் உடல்நலக் குறைபாட்டின் முதல் அறிகுறியே பால் குடிக்க முரண்டு பிடிப்பது அல்லது உட்கொள்ளும் பாலின் அளவு குறைதல் போன்றவையேயாகும்.

    சில வேளைகளில் பாலின் வரத்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பதை தாய் அறிவதில்லை. அதனால் கூட குழந்தை பால் அருந்த மறுக்கலாம். குழந்தை பால் அருந்த விரும்பாத பட்சத்தில், அதற்கான காரணத்தை கண்டறிவது மிகவும் முக்கியம். மேலும், இந்த பிரச்சனை குறிப்பிட்ட காலத்திற்குள் சரியாகாவிட்டால், குழந்தை நல மருத்துவரை உடனடியாக அணுகி இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது அவசியம். குழந்தை பிறந்து சில மாதங்களே ஆன நிலையில், குழந்தை பாலை மட்டுமே உட்கொள்ளும் பட்சத்தில் இத்தகைய சூழல் உருவாகுமானால் கூடிய விரைவில் மருத்துவரை அணுகுவது மிக மிக முக்கியம்.
    Next Story
    ×