search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இன்று மார்கழி மாதம் முதல் தேதி: கோவில்களில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு
    X

    இன்று மார்கழி மாதம் முதல் தேதி: கோவில்களில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு

    இன்று மார்கழி மாதம் முதல் தேதியாகும். கோவில்களில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    தமிழ் மாதங்களில் பக்தி மாதம் என்ற பெருமைக்குரியது மார்கழி. இந்த மாதத்தில் சுபகாரியங்கள் நடத்தப்படுவது இல்லை என்றாலும் கோவில்களில் அதிக அளவில் பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். மார்கழியில் வரும் ஏகாதசி தான் வைகுண்ட ஏகாதசி விழாவாக பெருமாள் கோவில்களில் கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று இரவு முழுவதும் கண்விழித்து விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் வைகுண்ட பதவியை அடையலாம் என்பது ஐதீகமாகும்.

    இத்தகைய சிறப்புக்குரிய மார்கழி மாதம் இன்று பிறக்கிறது. மார்கழி மாதம் முழுவதும் வைணவ தலங்களில் மட்டும் இன்றி சிவன், விநாயகர், முருகன் மற்றும் அனைத்து அம்மன் கோவில்களிலும் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

    மார்கழி அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவையும், குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் குளிர்ந்த நீரில் குளித்து கோவில்களுக்கு சென்று பஜனை பாடல்கள் படித்து இறைவனை வழிபடுவதும் மரபாக இருந்து வருகிறது. இதனால் வழிபாடு செய்வதற்காக கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் மார்கழி மாதத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை அதிகாலை நேரத்திலேயே பெண்கள் வீட்டு முன் வாசல் தெளித்து வண்ணக்கோலங்கள் போடுவதும் உண்டு.
    Next Story
    ×