search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புதுமையாய் கொலு வீற்றிருக்கும் பதுமைகள்
    X

    புதுமையாய் கொலு வீற்றிருக்கும் பதுமைகள்

    பழங்கால கொலுவில் இடம் பெற்ற பாரம்பரிய பொம்மைகள் முதல் தற்கால நவீன வாகன மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் வரை அனைத்தும் தற்கால கொலுவில் பிரதான இடம் பிடிக்கின்றன.
    நவராத்திரி வழிபாட்டின் சிறப்பே கொலுதான். நவராத்திரியின் முதல் நாள் தொடங்கி ஒன்பதாம் நாள் வரை வீட்டின் ஒரு பகுதியில் அழகிய பொம்மைகள், இறை உருவங்கள், பெரிய தலைவர்கள், அனைத்து வகை உயிரினங்கள், இயந்திரங்கள் என பூமியில் பரவி கிடக்கும் பெரிய மற்றும சிறிய உயிரினம் மற்றும் பயன்பாட்டு பொருட்கள் அனைத்தும் ஒவ்வொரு பிரிவிலும் கொலு வீற்றிருக்கும். பழங்கால கொலுவில் இடம் பெற்ற பாரம்பரிய பொம்மைகள் முதல் தற்கால நவீன வாகன மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் வரை அனைத்தும் தற்கால கொலுவில் பிரதான இடம் பிடிக்கின்றன.

    கொலு என்பது பல படிகள் கொண்ட மேடை அமைப்பில் வரிசையாக பலவித பொம்மைகளை அலங்கரித்து வைப்பதே. பஞ்சபூதங்களில் ஒன்றான மண்ணில் செய்யப்பட்ட பொம்மைகள் சக்தியின் அம்சமாக கருதப்பட்டு நவராத்திரி பூஜையின் ஒன்பது நாளும் வழிபடுகின்றனர். இதன் மூலம் சகல நன்மைகளும், செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இன்றைய நாளில் கொலு என்பது படிப்படியாக வைப்பது மட்டுமின்றி பரந்து விரிந்தவாறு பெரிய காட்சி அரங்கு கொண்டவாறும் வைக்கப்படுகிறது. பாரம்பரிய கொலுவின் தன்மை மாறாது புதிய கோணங்களில் நவீன கொலு வைக்கப்படுகிறது. கொலு வைப்பவர்கள் ஆண்டுக்கு ஆண்டு ஓர் புதுமையை புகுத்த எண்ணம் கொண்ட நவீன மாற்றங்களை செய்கின்றனர். எதிலும் புதுமையும், நவீனமும் மேற்கொள்ளும் புதிய தலைமுறையினர் பல புதுமை கொலுக்களை அரங்கேற்றி வருகின்றனர்.

    ரசனை மிகு பசுமை கொலு :

    கூடுதல் பணிகள் மேற்கொண்டு பொம்மைகள் நிற்கும் கொலு படிகளில் அழகிய மலர்செடிகள், சிறு புல் செடிகள், விவசாய நிலம் போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி விவசாய பணிகள் மேற்கொள்ளும் உருவங்கள் என்றவாறு பசுமை கொலு திகழ்கின்றன. மலை முகடுகள் நிறைந்த கோயில் தலங்கள் அதே பசுமை சுழல் மற்றும் மலை அமைப்புடன் ஏற்படுத்துவது, மலைகளின் ஓரப்பகுதிகளில் அருவிகள் விழுவது போன்ற இயற்கை அமைப்புகள் என வித்தியாசமான கொலுவை அமைக்கின்றனர். பழங்கள், காய்கறிகள் கொலுவில் பொம்மைகளாக அலங்கரிக்கப்படுகின்றன.



    நவதானியங்கள் முளைக்க வைக்கப்பட்டு அதனை கொண்டு கொலுவின் ஓரப்பகுதி மற்றும் பிரதான கோலப்பகுதி போன்றைவ அலங்கரிப்பு செய்யப்படுகின்றன. கிராமத்து பின்னணி கொண்டவாறு மரம், செடி, கொடிகள் இயற்கையானது மற்றும் செயற்கை பின்னணி உள்ளவாறு பசுமை கிராம கொலுவும் அரங்கேறுகின்றன.

    விளையாட்டு அரங்கு அமைப்பில் கொலு :

    பெரிய விளையாட்டு அரங்கு அமைப்பு உருவாக்கப்பட்டு அதில் பார்வையாளர்களாக பல பொம்மை உருவங்களும், சில தெய்வ உருவங்கள் இணைந்து கிரிக்கெட் மற்றும் பிற விளையாட்டுகள் விளையாடுவது போன்ற கொலு அற்புத வடிவமைப்பு. அதுபோல் நமது சென்னை நகரின் பல முக்கிய பகுதிகளை காட்சிபடுத்தும் சிறு மினியேச்சர் உருவங்கள் மற்றும் பொம்மைகள் வியப்பூட்டுகின்றன.

    விமானநிலையம், விற்பனை அலங்காரங்கள், சாலை மற்றும் வாகன போக்குவரத்து, பெரிய பங்களாக்கள், உழவர் சந்தைகள் போன்றவை தத்ரூபமாக சிறு சிறு பொம்மைகளுடன் காட்சி படுத்தப்பட்டு விஸ்தாரமான கொலு வைக்கப்படுகின்றன.

    புராண காட்சிகளை கண்முன் கொண்டுவரும் கொலு :

    தசாவதாரம், ராமர் பட்டாபிஷேகம் போன்றவை பிரதான புராண காட்சிகளாக இருக்கின்றன. தற்போது மகாபாரத போர் காட்சிகள், கோவர்த்தகிரியை தூக்கி பிடித்த கண்ணன், தெய்வீக திருமண காட்சிகள், 108 லிங்கம் மற்றும் ரிஷிகள் மண்டலம் என வித்தியாசமான உருவ பொம்மைகள் நிறைந்த கொலு பலரையும் வியப்படைய செய்கின்றன. தெய்வங்களின் திருமண கோலம் தத்ரூபமாக அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளன. எண்ணிலா புதுமைமிகு கொலுக்களின் அணிவகுப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகி கொண்டேயிருக்கின்றன.
    Next Story
    ×