search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மலைக்கோட்டை விநாயகருக்கு 27 வகையான அபிஷேகம் நடந்தது. அதில் சில அபிஷேக காட்சிகளை படத்தில் காணலாம்.
    X
    மலைக்கோட்டை விநாயகருக்கு 27 வகையான அபிஷேகம் நடந்தது. அதில் சில அபிஷேக காட்சிகளை படத்தில் காணலாம்.

    திருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 27 வகையான அபிஷேகம்

    விநாயகர் சதுர்த்தி 13-வது நாளையொட்டி திருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 27 வகையான அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

    இந்த மலைக்கோட்டை சுமார் 3ஆயிரத்து 500 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று புவியியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து கண்டறிந்தனர். மேலும் 273 அடி உயரமும், 417 படிகள் கொண்டதாகவும் உள்ளது. இந்த மலையின் உச்சியில் உச்சி விநாயகரும், மலையின் கீழ் பகுதியில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மலைக்கோட்டை உச்சி விநாயகர், மாணிக்க விநாயகருக்கு 150 கிலோ எடை கொண்ட ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டு உச்சிவிநாயகருக்கும், மாணிக்க விநாயகருக்கும் தலா 75 கிலோவாக பிரித்து தொட்டில் கட்டி தூக்கி சென்று படையல் போட்டு பக்தர்கள் அனைவருக்கும் கொழுக்கட்டை பிரசாதம் வழங்கப்பட்டது.


    உற்சவ விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த போது எடுத்த படம்.

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மலைக்கோட்டை உச்சி விநாயகர், மாணிக்க விநாயகர் கோவிலில் கடந்த 25-ந்தேதி தொடங்கி விநாயகருக்கு ஒவ்வொரு நாளும் உபயதாரர்களை கொண்டு மாணிக்க விநாயகர் கோவில் மண்டபத்தில் உற்சவ கணபதி, பால கணபதி, நாகாபரண கணபதி, லஷ்மி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூசிக கணபதி, ராஜ கணபதி, மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாருட கணபதி, சித்தி புத்தி கணபதி என 12 நாட்கள் மாலை 6 மணிக்கு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.

    இதில் 13-ம் நாளான நேற்று பகல் 12 மணிக்கு மாணிக்க விநாயகர் கோவில் மண்டபத்தில் உற்சவ விநாயகருக்கும், மாணிக்க விநாயகர் மூலவருக்கும் திருச்சி சாரதாஸ் சார்பில் விபூதி, சந்தனாதி தைலம், திரவிய பொடி, அரிசி மாவு, நெல்லி முல்லி பொடி, மஞ்சள் பொடி, குங்குமம், தேன், நெய், பஞ்சாமிர்தம், பால், தயிர், எலுமிச்சை பழம், சாத்துக்குடி, கரும்புச்சாறு, திராட்சை, விளாம்பழம், மாதுளை, அன்னாசிப்பழம், முப்பழம், பழவகைகள், அன்னாபிஷேகம், வெந்நீர், இளநீர், சந்தனம், சொர்ணாபிஷேகம், பன்னீர் ஆகிய 27 வகையான அபிஷேகமும் அதை தொடர்ந்து நடன கணபதிக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    14-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு மூலவர், உற்சவருக்கு திருக்கோவில் பணியாளர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகம், லட்சார்ச்சனையும் நடைபெற்று விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் செய்து இருந்தனர்.
    Next Story
    ×