search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவேங்கடமுடையான் வெங்கடேசப் பெருமாள் கோவில்
    X

    திருவேங்கடமுடையான் வெங்கடேசப் பெருமாள் கோவில்

    சென்னை பாரிமுனை அருகே சவுகார்பேட்டை பகுதியில் உள்ள ஜெனரல் முத்தையா தெருவில் திருவேங்கடமுடையான் வெங்கடேசப் பெருமாள் ஆலயம் இருக்கிறது.
    சென்னை பாரிமுனை அருகே சவுகார்பேட்டை பகுதியில் உள்ள ஜெனரல் முத்தையா தெருவில் இருக்கிறது பைராகி மடம். இங்கு திருவேங்கடமுடையான் வெங்கடேசப் பெருமாள் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் பூமியில் புதையுண்டு இருந்த திருவேங்கடமுடையான், ஸ்ரீதேவி, பூதேவி சமேதரை கண்டெடுத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்துள்ளனர். 60 அடி உயரம் கொண்ட இவ்வாலய நுழைவு வாசல் ஏழு கலசங்களுடன் 5 நிலை ராஜகோபுரம் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு இரண்டு பக்கங்களிலும் வாசல்கள் இருக்கின்றன.

    ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே நுழைந்ததும் பலிபீடம் உள்ளது. அதற்கடுத்தாற்போல் கருடாழ்வாரை தரிசிக்கலாம். கருவறையில் நான்கு திருக்கரங்களுடனும், வலது கரத்தில் சக்கரம், அபய முத்திரையுடனும், இடது கரத்தில் சங்கு, வரத முத்திரையுடனும், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வெங்கடேசப் பெருமாள் காட்சி தருகிறார்.

    அர்த்த மண்டபத்தின் வட பாகத்தில் ரங்கநாதர் தனிச்சன்னிதி கொண்டு அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னிதியில் இருந்து வருகையில், வெளிப்புற பிரகாரத்தில் தென்புறம் தனிச்சன்னிதியில் தாயார் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். இந்த ஆலய உற்சவத்தின் போது, தாயார் ஸ்ரீரூபமாக உள்ள கருடவாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பார்.

    தாயார் சன்னிதிக்கு இடப்பக்கத்தில் கோதண்டராமர் தனிச்சன்னிதியில் சீதா பிராட்டி, லட்சுமணன் சமேதராய் எழுந்தருளியுள்ளார். அருகில் ஆஞ்சநேயரின் சிறிய உருவம் உள்ளது. ராமர் சன்னிதிக்கு எதிரில் ஆஞ்சநேயர் தனிச்சன்னிதியில் இரு கரங்களும் கூப்பிய நிலையில் சாந்த சொரூபமாய் காட்சி தருகிறார்.


    லர்மேலு மங்கை தாயார்

    வெளிப்பிரகாரத்தில் சொர்க்கவாசலுக்கு அடுத்தபடியாக ஆண்டாள் புன்னகை பூத்த முகத்துடன், ஒரு கரத்தில் புஷ்பம் ஏந்தி வீற்றிருக்கிறார். ஆண்டாள் சன்னிதிக்கு வலப்பக்கமாக கண்ணன், பாமா, ருக்மணி சமேதராய், நான்கு கரங்களுடனும், வலது, இடது கரத்தில் சக்கரம், சங்கு ஏந்தியும், மற்ற இரு கரங்களினால் புல்லாங்குழல் வாசிப்பது போன்ற தோற்றத்திலும், வேணுகோபாலனாய் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். ஆண்டாள் சன்னிதிக்கு இடது புறம் தனிச் சன்னிதியில் வராக பெருமாள் அருள்கிறார்.

    ஆலய உற்சவங்கள் :

    சித்திரை மாதத்தில் 10 நாட்கள் ராமானுஜர் உற்சவம் நடக்கிறது. வைகாசி மாதத்தில் 10 நாட்கள் வரதர் உற்சவம், சுக்ல பட்ச சதுர்த்தியில் நரசிம்மர் ஜெயந்தி, விசாக நட்சத்திரத்தில் நம்மாழ்வார் சாற்றுமுறை, ஆடிப்பூரம், கிருஷ்ணஜெயந்தி, தீபாவளி, கார்த்திகை தீப விழா, வைகுண்ட ஏகாதசி என வருடம் முழுவதும் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

    இவ்வாலயம் இந்து சமய அறநிலயத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது. பைராகி மடத்தின் பரம்பரை அறங்காவலர் பைராகி மடம் மஹந்த் அலுவல் ரீதியான ஒரு அறங்காவலராக செயல்பட்டு வருகிறார்.

    ஆலயம் திறந்திருக்கும் நேரங்கள்: காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலயம் பக்தர்கள் தரி சனத்திற்காக திறந்திருக்கிறது.
    Next Story
    ×