தன்னார்வலர்கள் உணவு வழங்க தடை இல்லை- தமிழக அரசு விளக்கம்

தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உணவு வழங்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்து உள்ளது.
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு
Published on

சென்னை:

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகிறது. இவ்வாறு பொருட்களை வழங்கும்போது சமூக விலகலை பின்பற்றாமல் கூட்டமாக சென்று வாங்குவதால் நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும் என்பதால் நேரடியாக பொருட்களை வழங்க வேண்டாம் என தமிழக அரசு கூறி உள்ளது.

உதவி செய்ய விரும்பினால், பொருட்களை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடமோ அல்லது மாநகராட்சியாக இருந்தால் மாநகராட்சி கமிஷனரிடமோ, நகராட்சியாக இருந்தால் அந்தந்த நகராட்சி கமிஷனரிடமோ, பேரூராட்சியாக இருந்தால் செயல் அலுவலரிடமோ அல்லது ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி அலுவலரிடமோ வழங்கலாம். அவர்கள் அதை ஏழை, எளிய மக்களுக்கு சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள் என அரசு தெரிவித்தது.

இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு கிளம்பியது. உணவு வழங்குவதை அரசு தடுப்பதாக அரசியல்  தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையிடப்பட்டது.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழக அரசு இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. அதில், சூழ்நிலைக்கு ஏற்ப தன்னார்வலர்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டதாகவும், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் என யாருக்கும் தடை விதிக்கவில்லை என்றும் கூறி உள்ளது.

‘கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கையாகவே ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு தன்னார்வலர்கள் நேரடியாக உதவ கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. பேரிடருக்கு உதவுவது போன்று தன்னார்வலர்கள் நேரடியாக உதவ சென்றால் அது கொரோனா பரவலுக்கு வழிவகுத்து விடும். ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்கு அரசு தடை விதித்தது போல் சித்தரிக்கப்படுகிறது.  அரசு எந்தவித அரசியலும் செய்யவில்லை’ என்றும் அரசு விளக்கம் அளித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com