

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததை தொடர்ந்து அந்த கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் தொடர்ந்து விலகி வருகின்றனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 3-ந்தேதி முதல் தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 6 நாட்கள் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டம் 6-வது நாளாக நடைபெற்றது. இன்று காலை 10 மணி அளவில் நடைபெற்ற கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ. பாலகிருஷ்ண ரெட்டி பங்கேற்கவில்லை. அவர் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தார். சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தனி அணியாக ஆலோசனை கூட்டங்களை நடத்திய போது அவர்களுடன் பாலகிருஷ்ண ரெட்டி இணைந்து செயல்பட்டவர் ஆவார். இதை தொடர்ந்து அவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு அமைப்பு செயலாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
தனது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டதால் அதிருப்தி காரணமாகவே பாலகிருஷ்ண ரெட்டி எம்.எல்.ஏ. இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனை கூட்டங்களை இதற்கு முன்னரும் எம்.எல்.ஏ.க்கள் பலர் புறக்கணித்து உள்ளனர்.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஆற்காடு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான எஸ்.எம்.சுகுமார், திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி ஆகியோரும் பங்கேற்காமல் புறக்கணித்து இருந்தனர்.
தேர்தல் தோல்விக்கு பிறகு அ.தி.மு.க.வில் இருந்து பலரும் விலகி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து தொடர்ந்து ஆலோசனை கூட்டங்களை நடத்திய நிலையில் அந்த கூட்டங்களில் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து விலகிய எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் த.வெ.க.வில் இணைந்து உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி நடத்திய கூட்டத்தை புறக்கணித்துள்ள எம்.எல்.ஏ.க்களும் கட்சி மாறப்போகிறார்களா? என்ற பரபரப்பும் அரசியல் களத்தில் ஏற்பட்டு உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டம் நிறைவடைந்ததும் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து 6 நாட்களாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
ஒவ்வொரு நாளும் நடைபெற்ற கூட்டங்களில் பேசிய எடப்பாடி பழனி சாமி அ.தி.மு.க.வுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. விலகி செல்பவர்களை பற்றி யாரும் கவலை கொள்ள வேண்டும் என்று தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.