

சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்தும், கட்சி வளர்ச்சிக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட வாரியாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார்.
அதன்படி அவர் நேற்று ராணிப்பேட்டை கிழக்கு, ராணிப்பேட்டை மேற்கு, திருப்பத்தூர், திருவள்ளுவர் வடக்கு, திருவள்ளுவர் மத்தியம் ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, கட்சிக்கு துரோகம் செய்து விட்டு ஓடுபவர்களைபற்றி நாம் கவலைப்பட வேண்டாம். அ.தி.மு.க. தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. யாராலும் அழிக்க முடியாது. நமது கட்சியை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போனதாக தான் வரலாறு. சட்டசபை தோல்வியில் இருந்து கட்சியினர் மீண்டும் வர வேண்டும். இனி வர போகும் தேர்தல் நமக்கானது. வெற்றி நமது தான் என்றார்.
இதனை தொடர்ந்து, இன்று திருச்சி, நெல்லை மாவட்ட நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். முதலில் திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனையில், திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்தும், தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார். இதையடுத்து நெல்லை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என பலரும் விலகி த.வெ.க.வில் இணைந்து வருவது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த நிலையில், நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் பேசிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.