

முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் வருகைக்கு 2 நாட்கள் முன்பாகவே மிகப்பெரிய கெடுபிடியை காவல்துறை செய்தது. அஜந்தா சிக்னல் தொடங்கி காமராஜர் சிலை வரை அண்ணா சாலையில் கடைகள் மூட வைத்துள்ளனர். பொதுமக்கள் நடமாட்டம் இல்லை. மருத்துவமனைக்கும், கடைகளுக்கும் மக்கள் செல்ல முடியவில்லை. அவர்கள் அலைக்கழிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
பிரதமர் வருகைக்கு ஒரு நாள் முன்னதாகவே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் திருப்பிவிடப்பட்டதால் சிரமம் அடைந்தனர். பிரதமருக்கு பாதுகாப்பு தரலாம், ஆனால் மக்களை அலைக்கழித்திருக்க கூடாது. காவல்துறை செயல்பாடு மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு மாவட்ட நிர்வாகம் தேர்தல்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அவர்கள்தான் பொறுப்பு. பிரதமர் வருகைக்காக பொதுமக்களை துன்புறுத்துவது ஏற்புடையதல்ல. இடையூறு இல்லாமல் பிரசாரம் நடத்தலாம். போலீஸ், மாவட்ட நிர்வாகம் கெடுபிடி கண்டிக்கத்தக்கது. தனிநபருக்காக மக்கள் அவதிப்பட அவசியமில்லை. பிரதமர் வருவதற்கு 2 மணி நேரம் முன்பு மூடினால் ஏற்கலாம். ஆனால் 24 மணி நேரமாக மூடியிருப்பது தவறானது.
இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.