

இந்தியாவில் 2025-க்குள் காசநோயை ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காசநோய், தெரிவிக்கப்பட வேண்டிய நோயாக 2012-ல் பிரகடனப்படுத்தப்பட்டது.
காச நோய் குறித்து மருத்துவ துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.
ஆனால் காச நோய் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து சுகாதாரத்துறைக்கு முழுமையான தகவல் கிடைப்பது இல்லை. பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் அதுபற்றிய தகவலை முறையாக சுகாதாரத்துறைக்கு தெரிவிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் நாடு முழுவதும் காச நோயால் பாதிக்கப்படுவோர்கள் குறித்து முழுமையான புள்ளி விவரங்கள் சேகரிக்கப்படவில்லை. இதன் காரணமாக மத்திய சுகாதாரத்துறை இந்நோய்க்கு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது.
உலகளவில் காசநோய் பாதிப்பு அதிகம் உள்ள நாடாக இந்தியா உள்ளது. 2017-ம் ஆண்டு உலக சுகாதார மையத்தின் அறிக்கையில், 28 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் காசநோய் பற்றி சுகாதாரத் துறை அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் காச நோய் பற்றி சுகாதார உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காத டாக்டர்கள், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு இந்திய குற்றவியல் சட்டப்பிரிவுகள் 269, 270-ன் கீழ் 2 ஆண்டுவரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து காசநோய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தமிழகத்தில் காச நோயாளிகளுக்கு பல்வேறு கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 6 மாதம், 8 மாதம் என்ற கால அளவில் சிசிச்சை வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் 60 சதவீதம் பேர் சிகிச்சை பெறுகிறார்கள். 40 சதவிதம் பேர் தனியார் மருத்துவமனைகளில் இந்நோய்க்கு சிகிச்சை பெறுகின்றனர். அதுபற்றிய புள்ளி விவரங்கள் அரசுக்கு முறையாக தருவதில்லை.
தற்போது தேசிய சுகாதார மிஷன் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு காச நோயாளிகளுக்கு சத்தான உணவு சாப்பிடுவதற்கு ரூ.3000 வழங்கப்பட உள்ளது.
முற்றிலும் குணப்படுத்தக் கூடிய காசநோய் குறித்து மருத்துவர்கள் முறையான புள்ளி விவரங்களை தராததால் இந்நோயின் தாக்கம் பற்றியும் எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கை குறித்தும் மத்திய சுகாதாரத்துறைக்கு தெரியவரவில்லை.
அதனால் மற்ற தொற்று நோய் போல காசநோய் பாதித்தால் உடனடியாக அடையாளம் காணப்பட்டு அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆய்வக பரிசோதனையில் காச நோய் என உறுதி செய்யப்பட்டால் அந்த நோயாளியின் முழு விவரங்களை சுகாதாரத்துறைக்கு டாக்டர்கள், மற்றும் மருத்துவமனைகள் தெரிவிக்க வேண்டும். தெரிவிக்காதவர்கள் மீது அதன் அடிப்படையில் ஏற்கனவே உள்ள சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.