மு.க.ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களுக்கான உரிமை மீறல் நோட்டீசுக்கு இடைக்கால தடை-ஐகோர்ட் உத்தரவு

சட்டசபைக்குள் குட்கா கொண்டு வந்த விவகாரம் குறித்து திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை ஐகோர்ட்
சென்னை ஐகோர்ட்
Published on

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன என்று குற்றம்சாட்டி, கடந்த 2017-ம் ஆண்டு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவற்றை சட்டசபைக்குள் கொண்டு சென்று காண்பித்தனர்.

இந்த செயல் சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 தி.மு.க. எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டசபை உரிமைக்குழு, கடந்த 7-ந் தேதி ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் புதிதாக நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டாலின் உள்பட 18 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஆர்.சண்முகசுந்தரம், ‘இந்த விவகாரத்தில் 2017-ம் ஆண்டு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசில் அடிப்படை தவறு இருப்பதாக கூறி அதை ரத்து செய்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. குட்கா வைத்திருந்தால் அது குற்றமா? இல்லையா? என்பது நீதிமன்றத்தில் முடிவெடுக்க வேண்டிய விவகாரம் என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே விவகாரத்தை சுட்டிக்காட்டி மீண்டும் உரிமை மீறல் குழு நோட்டீஸ் அனுப்பியது சரியல்ல. எனவே, இதை ரத்து செய்ய வேண்டும்’ என்று வாதாடினார்.

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் அமீத் ஆனந்த் திவாரி, என்.ஆர்.இளங்கோ ஆகியோர், ‘ஏற்கனவே ஒருதரப்புக்கு ஆதரவாக நடவடிக்கை எடுத்த அதே உரிமைக் குழு தான் மீண்டும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பேரவை விதியை மீறும் வகையில் மீண்டும் குழு அமைக்கப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தி.மு.க. மீது அதிருப்தியில் உள்ள துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் உரிமைக்குழுவில் இருக்கிறார்’ என்றனர்.

சட்டசபை செயலாளர் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், ‘சட்டசபைக்குள் குட்கா பாக்கெட்டை காண்பிப்பதை அனுமதிக்க முடியாது என்று சபாநாயகர் பலமுறை கூறி உள்ளார். அதையும் மீறி குட்கா பாக்கெட்டை காண்பித்து உள்ளனர். எனவே, இது உரிமை மீறல்தான். உரிமைக்குழு தனது முடிவை சபாநாயகருக்கு பரிந்துரை மட்டுமே செய்யும். சபாநாயகர் தான் முடிவெடுப்பார்’ என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் செப்டம்பர் 24-ந் தேதி (இன்று) இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கை தள்ளிவைத்தார். அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, திமுக எம்எல்ஏக்களுக்கான உரிமை மீறல் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதி தெரிவித்தார். மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொடரும் என நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக சபாநாயகர், சட்டசபை செயலாளர் மற்றும் உரிமைக்குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com