

நாகர்கோவில்:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் கேரள மாநிலத்தின் அருகில் உள்ள குமரி மாவட்டத்தில் இந்த வைரஸ் பரவாமல் இருப்பதற்காக அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் மேற் கொண்டு உள்ளது.
முதல்கட்டமாக கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வந்த பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களும் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டன. அதில் பயணம் செய்த பொதுமக்களும் மருத்துவ பரிசோதனைக்கு ஆளாக்கப்பட்டனர்.
அதன்பிறகு குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு பஸ் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. அங்கிருந்தும் பஸ்கள் வர அனுமதிக்கப்படவில்லை. அத்தியாவசிய வாகனங்கள் மட்டும் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக கேரள - குமரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளை மூடி அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
குமரி-கேரள எல்லையில் 39 சோதனைச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 36 சோதனைச் சாவடிகள் நேற்று முதல் மூடப்பட்டன. இந்த சோதனைச்சாவடிகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் இந்த வழியாக அத்தியாவசிய வாகனங்கள் கூட செல்ல அனுமதிக்கப்படாது.
இந்த 36 சோதனைச்சாவடிகளில் படந்தாலுமூடு, மார்க்கெட் ரோடு, சிறிய கொல்லா ஆகிய 3 சோதனைச்சாவடிகளில் மட்டும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.
அதேசமயம் களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோதனைச் சாவடி, கோழிவிளை சோதனைச்சாவடி, நெட்டா சோதனைச்சாவடி ஆகிய 3 சோதனைச்சாவடிகள் மட்டும் திறந்து உள்ளன. இந்த 3 சோதனைச்சாவடிகள் வழியாக அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது. அந்த வாகனங்களிலும் வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இங்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குமரி - கேரள எல்லை பகுதிகள் சீல் வைக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.