search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தெலுங்கானாவில் நவரத்தின எம்.பி.க்கள் பாராளுமன்றம் செல்வார்கள்: தமிழிசை நம்பிக்கை
    X

    தெலுங்கானாவில் "நவரத்தின எம்.பி.க்கள்" பாராளுமன்றம் செல்வார்கள்: தமிழிசை நம்பிக்கை

    • பெண்கள் பற்றி தவறாக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்போம்.
    • கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற 5 மாநில பட்ஜெட்டுகளுக்கு தேவைப்படும் நிதி வேண்டும்.

    சென்னை:

    தெலுங்கானாவில் கவர்னராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு தென் சென்னை தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களம் இறங்கினார்.

    இந்த நிலையில் கவர்னராக இருந்த மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் டாக்டர் தமிழிசை இன்று சென்னை திரும்பினார்.

    விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சி 3 ஆண்டுகளை நிறைவு செய்து 4-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதாக கூறும் நிலையில் நானும் இங்கு வந்துள்ளேன். இந்த ஆட்சி முற்றிலும் தோற்றுவிட்டது.

    சொல்லாட்சியும் இல்லை. செயலாட்சியும் இல்லை. பொய்யாட்சிதான் நடக்கிறது. கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கரை கைது செய்துள்ளார்கள். கஞ்சா கடத்துபவர்களை உங்களுடன்தான் வைத்திருக்கிறீர்கள். அவர்களையும் கைது செய்வதில் ஆர்வம் காட்ட வேண்டுமல்லவா?

    பெண்கள் பற்றி தவறாக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்போம். அதற்கு தண்டனை வாங்கி கொடுக்க கஞ்சா தேவையில்லை. சட்டம் போதும்.

    2026 தேர்தலை சந்திக்க இவர்கள் எந்த சாதனையும் செய்யவில்லை. எனவேதான் டி.எம்.கே.வை நம்பாமல் பி.கே.வை (பிரசாந்த் கிஷோர்) நம்புகிறார்கள் என்றார். பின்னர் தெலுங்கானா மாநில தேர்தல் பிரசார அனுபவம் பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-

    ஐதராபாத், செகந்திராபாத் மேடக், சசிராயாத் உள்பட 9 தொகுதிகளில் பணியாற்றினேன். பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோ அரங்க கூட்டங்கள் மூலம் பலதரப்பட்ட மக்களையும் சந்தித்தேன்.

    மன கவர்னர் (மக்கள் கவர்னர்) என்று மக்கள் காட்டிய அன்பு நெகிழ வைத்தது. கடந்த தேர்தலில் அந்த மாநிலத்தில் 4 எம்.பி.க்கள் வெற்றி பெற்றார்கள். இந்த தேர்தலில் நவரத்தினங்களுக்கு (9-க்கு) குறையாமல் பாராளுமன்றத்துக்கு செல்வார்கள். ஏற்கனவே 4.5 சதவீதமாக இருந்த வாக்குவங்கி இப்போது 14.5 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. சமீபத்தில் நடந்த 3 தொகுதி இடைத்தேர்தலில் 2 தொகுதியில் பா.ஜனதா வென்றுள்ளது.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகிறது. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளையெல்லாம் கொடுத்துவிட்டு நிறைவேற்ற முடியாமல் திணறுகிறார்கள். பெண்களுக்கு ரூ.2,500 உரிமைத்தொகை, முதியவர்களுக்கு ரூ.4 ஆயிரம் பென்ஷன், விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை, ரூ.2 லட்சம் வரை வங்கி கடன் ரத்து என்று அள்ளிவிட்டார்கள்.

    கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற 5 மாநில பட்ஜெட்டுகளுக்கு தேவைப்படும் நிதி வேண்டும். எனவே மக்கள் காங்கிரசின் வார்த்தை ஜாலங்களை புரிந்து கொண்டார்கள். எனவே தெலுங்கானாவும் பிரதமர் மோடியின் குடும்பமாகிவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×