இந்தியா

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானியை எதிர்த்து ராகுல் போட்டியிட தயக்கம்

Published On 2024-04-29 07:47 GMT   |   Update On 2024-04-29 07:47 GMT
  • வேறு யாரை அங்கு வேட்பாளராக களம் இறக்குவது என்று ஆலோசனை நடந்து வருகிறது.
  • காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தொகுதிகளாக கருதப்படுகின்றன. ரேபரேலி தொகுதியில் இருந்து சோனியா தேர்வு செய்யப்பட்டு வந்தார். தற்போது அவர் மேல்சபை எம்.பி. ஆகி விட்டதால் அந்த தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியானது. இதற்கிடையே ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் களம் இறங்குவார் என்று தகவல்கள் வெளியானது. கடந்த முறை ராகுல் அமேதி தொகுதியில் ஸ்மிருதிஇரானியிடம் தோல்வியை தழுவினார். வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அவர் எம்.பி. யாக முடிந்தது. இந்த தடவையும் அவர் வயநாடு தொகுதியில் களம் இறங்கி உள்ளார். அந்த தொகுதியில் ஓட்டுப்பதிவு முடிந்துவிட்டது.

இந்த நிலையில் அவர் அமேதியிலும் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அமேதியில் ராகுலையும், ரேபரேலியில் பிரியங்காவையும் களம் இறக்குவது பற்றி காங்கிரஸ் தேர்தல் மையக்குழு ஆலோசனை கூட்டம் கடந்த சனிக்கிழமை டெல்லியில் நடந்தது. அதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அமேதி, ரேபரேலி தொகுதி நிலவரம் பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ராகுல் மற்றும் பிரியங்காவை இந்த தொகுதிகளில் போட்டியிட வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விருப்பம் தெரிவித்தனர். ராகுல் போட்டியிடுவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அமேதி தொகுதியில் ராகுல் போட்டியிடுவது தொடர்பாக அறிவிப்பை காங்கிரஸ் வெளியிடவில்லை.

இந்த நிலையில் அமேதி தொகுதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26-ந்தேதி தொடங்கியது. வருகிற 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். இந்த நிலையில் இன்று பா.ஜ.க. வேட்பாளர் ஸ்ருமிதி இரானி மனுதாக்கல் செய்து உள்ளார். அவரை எதிர்த்து ராகுல் களத்தில் இறங்குவாரா? என்பதில் தற்போது கேள்விக்குறி எழுந்துள்ளது. ஸ்ருமிதிஇரானியை எதிர்த்து போட்டியிட ராகுல் மிகவும் தயங்குவதாக தெரிய வந்துள்ளது. கடந்த முறை ராகுலை சுமார் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இரானி வீழ்த்தி இருந்தார். அதன் பிறகு அவர் அமேதி தொகுதியில் ஏராளமான வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு அந்த தொகுதியில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. இதனால் அமேதியில் போட்டியிட்டால் மீண்டும் தோல்வியை தழுவ நேரிடுமோ? என்று ராகுல்காந்தி தயங்குவதாக தெரிய வந்துள்ளது.

இதையடுத்து வேறு யாரை அங்கு வேட்பாளராக களம் இறக்குவது என்று ஆலோசனை நடந்து வருகிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். அவரை அமேதியில் காங்கிரஸ் களம் இறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரியல் எஸ்டேட் உள்பட பல்வேறு தொழில்கள் செய்து வரும் ராபர்ட் வதேரா மீது ஏற்கனவே மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News