வழிபாடு

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் இன்று தேரோட்டம்

Published On 2024-04-21 07:02 GMT   |   Update On 2024-04-21 07:02 GMT
  • ஆண்டுக்கு 2 முறை பிரமோற்சவ விழா நடைபெறுகிறது.
  • கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் தை மற்றும் சித்திரை என ஆண்டுக்கு 2 முறை பிரமோற்சவ விழா நடைபெறுகிறது.

இந்த நிலையில் சித்திரை மாத பிரமோற்சவ விழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் காலையும், மாலையும் இரு வேளைகளில் உற்சவர் வீரராகவ பெருமாள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

 பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் வீரராகவ பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில், ஸ்ரீதேவி- பூதேவி சமேதராய் அதிகாலை 5.30 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 அதைத் தொடர்ந்து காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. பனகல் தெரு, குளக்கரை வீதி, பஜார் வீதி, வடக்குராஜ வீதி, மோதிலால் தெரு என நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்து மீண்டும் தேரடியை வந்தடைந்தது.

இந்த விழாவில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ன பக்தி பரவசத்துடன் உப்பு, மிளகு ஆகியவற்றை தேர் சக்கரத்தின் மீது கொட்டி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் 9-வது நாளான வருகிற 23-ந்தேதி காலை தீர்த்தவாரி நடக்கிறது. 10-வது நாளான 24-ந்தேதி இரவு 9 மணிக்கு கண்ணாடி பல்லக்கில் உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News