search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகொரியாவின் அச்சுறுத்தல் எதிரொலி: ஜப்பானில் ஏவுகணை தாக்குதல் பாதுகாப்பு ஒத்திகை
    X

    வடகொரியாவின் அச்சுறுத்தல் எதிரொலி: ஜப்பானில் ஏவுகணை தாக்குதல் பாதுகாப்பு ஒத்திகை

    வடகொரியாவின் அச்சுறுத்தல் தொடர்ந்து வரும் நிலையில், ஜப்பானில் நேற்று ஏவுகணை தாக்குதல் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.
    டோக்கியோ:

    வடகொரியாவின் அச்சுறுத்தல் தொடர்ந்து வரும் நிலையில், ஜப்பானில் நேற்று ஏவுகணை தாக்குதல் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.

    ஐ.நா. மற்றும் அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து அணு ஆயுதங்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை சோதித்து வரும் வடகொரியாவின் நடவடிக்கைகள் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றத்தை அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த நாடு நடத்திய நீண்ட தூர ஏவுகணைகளில் சில, ஜப்பான் வான்பகுதியை கடந்து சென்று கடலில் விழுந்தன.

    இதனால் வடகொரியா மீது ஜப்பான் தொடர்ந்து ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக வடகொரியாவுக்கு, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனங்களையும் தெரிவித்தன.

    இந்த நிலையில் வட மற்றும் தென்கொரிய நாட்டு பிரதிநிதிகள் அமைதி பேச்சுவார்த்தையை தொடர முன்வந்துள்ளனர். மேலும் தென்கொரியாவில் அடுத்த மாதம் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியா பங்கேற்கும் எனவும் நம்பப்படுகிறது. இது கொரிய தீபகற்பத்தில் நிலவும் போர் பதற்றத்தை தணிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால் வடகொரியாவின் இந்த ஏவுகணை மற்றும் அணு ஆயுத தயாரிப்பு இன்னும் தீவிரமாகும் என ஜப்பான் நம்புகிறது. அவ்வாறு வடகொரியா ஏவுகணை தாக்குதலை நடத்தினால் அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை அந்த நாடு தொடங்கி உள்ளது. இதற்காக ஏவுகணைகளை நடுவானில் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளுடன் போர்க்கப்பல்கள் ஜப்பான் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் நிலத்திலும் அதுபோன்ற ஏவுகணைகளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இது ஒருபுறம் இருக்க, வடகொரியா ஏவுகணை தாக்குதல் நடத்தினால் அதிலிருந்து மக்களை பாதுகாப்பது எப்படி? என்பது குறித்த ஒத்திகையை முதன்முதலாக அந்த நாடு நேற்று நடத்தியது. பாதுகாப்பு இடங்களை நோக்கி மக்களை வெளியேற்றுதல், பதுங்கு குழிகளில் தங்க வைத்தல் போன்ற ஒத்திகைகளை தன்னார்வ தொண்டர்கள் நடத்திக்காட்டினர்.

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள விளையாட்டு மைதானம், பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்கள் இந்த பாதுகாப்பு ஒத்திகையை நடத்தினர். இதைப்போல நாடு முழுவதும் சிறிய நகரங்கள், கிராமங்களிலும் இதுபோன்ற ஒத்திகைகள் நடந்தன.

    இந்த ஒத்திகைக்குப்பின் அரசு அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘வடகொரியா செலுத்தும் ஏவுகணை 10 நிமிடங்களுக்குள் இங்கு வந்துவிடும். அங்கு ஏவுகணை ஏவப்பட்ட 3-வது நிமிடத்தில் இங்கு எச்சரிக்கை விடப்படும். ஆனால் சுமார் 5 நிமிடங்களுக்குள் நாங்கள் பாதுகாப்பான இடங்களுக்குள் சென்றாக வேண்டும்’ என்றார்.

    இதைப்போல ஒத்திகையில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர் ஒருவர் கூறுகையில், ‘வடகொரியாவை பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் ஏவுகணை வீசப்பட்டால் அது பயங்கரமாக இருக்கும். அந்த நேரத்தில் நான் பணியில் இருந்தால் மக்களை வெளியேற்றுவது எளிதாக இருக்கலாம். ஆனால் அப்போது நான் வெளியில் இருந்தால், வெளியேற்றுவது கடினமாக இருக்கும்’ என்றார். 
    Next Story
    ×