search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செலவினத்துக்கு நிதி ஒதுக்க செனட் சபை மறுப்பு: அமெரிக்க அரசு அலுவலகங்கள் முடங்கின
    X

    செலவினத்துக்கு நிதி ஒதுக்க செனட் சபை மறுப்பு: அமெரிக்க அரசு அலுவலகங்கள் முடங்கின

    அமெரிக்காவில் புதிய வரவு செலவுத் திட்டத்தை செனட் சபை ஏற்றுக் கொள்ளாததால் அரசு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. #usgovt #shutdown
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் புதிய வரவு செலவுத் திட்டத்தை செனட் சபை ஏற்றுக் கொள்ளாததால் அரசு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 16-ம் தேதி வரை அரசு பணிகளை கவனிக்க நிதியளிக்கும் இந்த மசோதா நிறைவேறுவதற்கு தேவையான 60 ஓட்டுகளைப் செனட் சபையில் பெற இயலவில்லை. எல்லை பாதுகாப்பு மற்றும் கனவுகளுடன் புதிதாக அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பான தங்களது விருப்பத்துக்கு அரசு மதிப்பளிக்காததால் இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் தோற்கடித்தன.

    அமெரிக்க பாராளுமன்றத்தில் பெரும்பாண்மை வகிக்கும் குடியரசு கட்சியைச் சேர்ந்தவரே அதிபராகவும் உள்ள நிலையில் இந்த வரவு செலவு திட்டம் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    அரசு செலவினங்களை சமாளிக்க அடுத்த மாதம் வரை நிதி அளிப்பதை நீட்டிக்கும் முடிவுக்கு பிரதிநிதிகள் சபையில் 230 வாக்குகள் ஆதரவாகவும் 197 வாக்குகள் எதிராகவும் பதிவானது. ஆனால், 100 உறுப்பினர்களை கொண்ட செனட் சபையில் 60 வாக்குகளை பெற்றாக வேண்டும் என்ற நிலையில் மசோதாவுக்கு எதிராக 50 வாக்குகளும் ஆதரவாக 49 வாக்குகளும் விழுந்ததால் அங்கு மசோதா தோல்வியை சந்தித்தது.

    எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த ஐந்து உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த போதிலும், டிரம்பின் கட்சியை சேர்ந்த ஐந்து குடியரசு உறுப்பினர்கள் இதற்கு எதிராக வாக்களித்தனர். 

    நாடாளுமன்றம் நிதி ஒதுக்கவில்லை என்றால் அரசு நிறுவனங்கள் மற்றும் பல அரசு அலுவலகங்கள் மூடப்படும். தேசிய பூங்காக்கள் மற்றும் நினைவுச் சின்னங்களும் மூடப்படலாம். மறு உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை ராணுவம் உள்ளிட்ட அத்தியாவசியமான துறைகளில் பணியாற்றுபவர்கள் சம்பளம் இல்லாமல் பணியாற்ற வேண்டும்.

    ஆனாலும், அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து இயங்கும். தேசியப் பாதுகாப்பு, தபால் சேவைகள், விமான போக்குவரத்து கட்டுப்பாடு, மருத்துவ சேவை, சிறைச்சாலைகள், வரிவிதிப்பு மற்றும் மின்சார உற்பத்தி போன்ற சேவைகள் தொடர்ந்து இயங்கும்.

    இந்நிலையில், உள்ளூர் நேரப்படி நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் இருந்து அரசு அலுவலகங்கள் முடங்கின. டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற முதலாம் ஆண்டினை இன்று (20-ம் தேதி) ஆளும்கட்சியினர் வெகு சிறப்பாக கொண்டாட திட்டமிட்டிருந்த நிலையில் அமெரிக்க அரசு அலுவலகங்கள் இன்றிலிருந்து கதவடைப்பு செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 2013-ம் ஆண்டிலும் இதுபோல் ஒருமுறை நடைபெற்றதும், இதனால் 16 நாட்கள் அரசு அலுவலகங்களின் செயல்பாடு முடங்கியது நினைவிருக்கலாம். #tamilnews #usgovt #shutdown 
    Next Story
    ×