search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிம்பாப்வே நாட்டில் ராணுவ ஆட்சி: இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்கின்றனர் - சுஷ்மா தகவல்
    X

    ஜிம்பாப்வே நாட்டில் ராணுவ ஆட்சி: இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்கின்றனர் - சுஷ்மா தகவல்

    ஜிம்பாப்வே நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர் என தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    ஹராரே:

    ஜிம்பாப்வே நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர் என வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

    ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ராபர்ட் முகபே (93) 1980-ம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகித்து வருகிறார். அதிகாரத்தை தனது வசம் கொண்டு வர முயற்சிப்பதாக கூறி அந்நாட்டு துணை அதிபர் எம்மர்சன் நாங்காவாவை கடந்த வாரம் முகபே பதவி நீக்கம் செய்தார்.

    இதனால், ஆளும் ஷானு - பி.எப் கட்சியில் பிளவு ஏற்பட்டது. ராணுவ தலைமை தளபதி ஜெனரல் சிவெங்கா, நீக்கப்பட்ட துணை அதிபர் நாங்காவாவுக்கு ஆதரவாக நின்றார். இதனால், அந்நாட்டு அரசியலில் குழப்பநிலை ஏற்பட்டது.

    இதற்கிடையே, உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை தலைநகர் ஹரரேவை ராணுவ பீரங்கிகள் சுற்றி வளைத்தன. ராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் தலைநகரை சுற்றி குவிக்கப்பட்டிருந்தனர். துப்பாக்கி மற்றும் பீரங்கிகளால் சுடும் சப்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அந்நாட்டு அரசு ஊடக தலைமையகத்தையும் ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.

    பாராளுமன்றம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களையும் படிப்படியாக ராணுவம் முற்றுகையிட்டு, தன்வசம் கொண்டு வந்தது. இதற்கிடையே, ‘ரத்தம் சிந்தாமல் நடைபெற்ற மாற்றம்’ என ஆளும்கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    ஜிம்பாப்வேயில் குழப்பமான சூழ்நிலை நிலவுவதால் தங்களது நாட்டவர்கள் வெளியே செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படி அனைத்து நாட்டு தூதரகங்களும் அறிவுறுத்தியுள்ளன.

    இந்நிலையில், ஜிம்பாப்வேயில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டரில் கூறுகையில், ஹராரேயில் அமைதி நிலவுகிறது. இந்தியர்கள் அனைவரும் தகுந்த பாதுகாப்புடன் உள்ளனர். நான் தொடர்ந்து தூதரக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு வருகிறேன் என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×