search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈராக் நிலநடுக்கத்துக்கு பலி எண்ணிக்கை 400 ஆக உயர்வு - 6 ஆயிரம் பேர் படுகாயம்
    X

    ஈராக் நிலநடுக்கத்துக்கு பலி எண்ணிக்கை 400 ஆக உயர்வு - 6 ஆயிரம் பேர் படுகாயம்

    ஈரான்-ஈராக் நாடுகளின் எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 400 பேர் பலியாயினர். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
    டெஹ்ரான்:

    ஈரான்-ஈராக் நாடுகளின் எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 400 பேர் பலியாயினர். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    ஈரான்-ஈராக் நாடுகளின் எல்லையில் ஜக்ரோஸ் மலைப்பிரதேசம் உள்ளது. இதன் பெரும் பகுதி ஈரான் எல்லைக்குள் கெர்மான்ஷா என்ற மாகாணத்துக்குள் இருக்கிறது. ஈராக்கின் குர்திஸ்தான் மாகாணத்தின் கிழக்கு நகரான ஹலாப்ஜாவும் இந்த மலைப்பகுதியில் அமைந்த முக்கிய நகராகும். இவை அவ்வப்போது நிலநடுக்கத்துக்கு உள்ளாகும் அபாயகர பகுதிகள்.



    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று இப்பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 23.2 கிலோ மீட்டர் ஆழத்தில் 31 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் ஸ்கேல் அளவில் 7.3 புள்ளியாக பதிவானது. இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்தது. நிலநடுக்கத்தின்போது உண்டான அதிர்வு சத்தம் மத்திய தரைக்கடல் பகுதியிலும், ஈராக் தலைநகர் பாக்தாத்திலும் உணரப்பட்டது.

    இதனால், அன்றாட பணிகளை முடித்துவிட்டு இரவில் தூங்குவதற்காக ஆயத்தமான ஜக்ரோஸ் பிரதேச மக்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாயினர். குழந்தைகள், பெண்கள், முதியோரை அழைத்துக்கொண்டு அலறியடித்தவாறு வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.

    எனினும் பலத்த நில அதிர்வு காரணமாக 10 கிராமங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆயின. ஈரானின் சர்போல் -இ ஜகாப் என்ற சிறுநகரம் முற்றிலுமாக சேதம் அடைந்தது. அங்குள்ள 2 மருத்துவமனைகளும் பலத்த சேதம் அடைந்ததால் நிலநடுக்கத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.



    இந்த நிலநடுக்கத்தில் ஈரானில் 380 பேரும், ஈராக்கில் 20 பேரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். இடிபாடுகளுக்குள் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கி படுகாயம் அடைந்தனர். இவர்களில் 400 பேர் ஈராக்கியவர்கள் ஆவர். பலியானவர்களில் பெரும்பாலானோர் மலைப்பகுதியில் கால்நடைகள் வளர்ப்பு தொழிலை வாழ்வாதாரமாக கொண்டவர்கள் ஆவர்.

    நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் மீட்பு, நிவாரண பணிகளில் இரு நாடுகளின் ராணுவமும் இறங்கின. ஈராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி உடனடியாக தேசிய பேரிடர் படையினரை ஜக்ரோஸ் பகுதிக்கு அனுப்பி வைத்தார்.

    இதேபோல ஈரான் அதிபர் அயத்துல்லா அலி கமேனியும் பேரிடர் மீட்பு பணியில் ஈடுபட உத்தரவிட்டார். நிலநடுக்கத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அவர் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார். ஈரானில் மட்டும் 70 ஆயிரம் பேர் வீடு, வாசல்களை இழந்து பரிதவிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

    கட்டிடங்கள், வீடுகள் ஆங்காங்கே இடிந்து கிடப்பதால் மீட்பு பணிகள் சற்று மந்தமாக நடந்து வருகின்றன. மேலும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பின்னர் அடுத்தடுத்து 100 முறை பூமி குலுங்கியதால் உயிர் தப்பியவர்கள் பீதியில் உறைந்தனர்.

    நிலநடுக்கம் பற்றி பாக்தாத் நகர பெண்மணி மஜிதா அமீர் கூறுகையில், “எனது குழந்தைகள் மூவருடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது எங்கள் வீடு நடனம் ஆடியதுபோல் இருந்தது. முதலில் யாரோ வெடிகுண்டு போட்டு விட்டார்கள் என்று நினைத்தேன். அப்போது எல்லோரும் ‘நிலநடுக்கம், நிலநடுக்கம்’ என கத்திக் கொண்டே வீட்டை விட்டு வெளியே ஓடினர். நானும் குழந்தைகளுடன் வெளியே ஓடி வந்துவிட்டேன்” என்றார்.

    ஈரானில் 2003-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாம் என்ற நகரில் 26 ஆயிரம் பேர் பலியாயினர் என்பது நினைவு கூரத்தக்கது. 
    Next Story
    ×