search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ தளபதிக்கு அனுமதி மறுப்பு: அமெரிக்காவிடம் விளக்கம் கேட்கும் இந்தோனேசியா
    X

    ராணுவ தளபதிக்கு அனுமதி மறுப்பு: அமெரிக்காவிடம் விளக்கம் கேட்கும் இந்தோனேசியா

    ராணுவ தளபதிகள் மாநாட்டில் பங்கேற்க சென்ற தங்கள் நாட்டின் ராணுவ தளபதியை அமெரிக்காவில் தரையிறங்க அனுமதிக்காதது ஏன்? என அமெரிக்க அரசை இந்தோனேசியா கேட்டுள்ளது.
    ஜகர்தா:

    அமெரிக்காவில் இன்றும் நாளையும் (23,24-ம் தேதி) அந்நாட்டின் ராணுவ தளபதிகள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க வருமாறு இந்தோனேசியா நாட்டின் ராணுவ தளபதி கட்டாட் நுர்மண்ட்யோ-வுக்கு அமெரிக்க முப்படைகளின் தலைவர் ஜோசப் டன்போர்ட் அழைப்பு விடுத்திருந்தார்.

    வாஷிங்டன் நகரில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜகர்தா நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் எமிரேட்ஸ் விமானத்தில் ஏற முயன்றபோது, அவரை அமெரிக்க எல்லையில் தரையிறங்க அனுமதிக்க முடியாது என அமெரிக்க எல்லை பாதுகாப்பு முகமை அதிகாரிகள் தெரிவித்திருந்ததாக தகவல் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து, கட்டாட் நுர்மண்ட்யோ ஏமாற்றத்துடன் திரும்பினார். அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை தொடர்பான செய்திகள் வெளியானதும் இந்தோனேசிய மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அமெரிக்க அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் ஜகர்தா உள்ளிட்ட பகுதிகளில் பேனர்களும், பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

    ஜகர்தாவில் இருக்கும் அமெரிக்க தூதரை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும். அங்குள்ள அமெரிக்கர்களையும் நாட்டைவிட்டு விரட்ட வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில், இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ரெட்னோ மார்சுடி, ஜகர்தா நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இன்று தலைமை தூதரை சந்தித்து இதுதொடர்பாக முறையீடு செய்தார். மேற்கண்ட சம்பவத்துக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக அமெரிக்காவிடம் இருந்து விளக்கத்தை எதிர்பார்க்கிறோம் என செய்தியாளர்களிடம் ரெட்னோ மார்சுடி தெரிவித்தார்.
    Next Story
    ×