search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிந்து நதி நீர் ஒப்பந்தம்: உடன்பாடு எட்டப்படாமல் முடிவடைந்தது பேச்சுவார்த்தை
    X

    சிந்து நதி நீர் ஒப்பந்தம்: உடன்பாடு எட்டப்படாமல் முடிவடைந்தது பேச்சுவார்த்தை

    சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக வாஷிங்டனில் இரண்டு நாட்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
    வாஷிங்டன்:

    இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சிந்து நதி நீர் பங்கீடு தொடர்பாக உலக வங்கி உதவியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, 1960-ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதன்படி, ஜீலம் மற்றும் செனாப் ஆற்று நீரைப் பயன்படுத்த, இரு நாடுகளுக்கும், சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    அதன்பின்னர், ஜீலம் மற்றும் செனாப் ஆற்றுப் பகுதியில் கிஷன்கங்கா, ராட்லே ஆகிய நீர்மின் நிலையங்களை அமைக்க, இந்தியா திட்டமிட்டது. அதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த விவகாரம் உலக வங்கியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இரு நாடுகளும் உலக வங்கியில் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்தன. கடைசியாக ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி உலக வங்கி அதிகாரிகள் முன்னிலையில் இரு நாடுகளுக்குமிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் அதிகாரிகள் பங்கேற்ற உயர்மட்ட ஆலோசனைக்கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக (செப். 14, 15) வாஷிங்டனில் நடந்தது. உலக வங்க தலைமையகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்களை தொடர்ந்து பாரபட்சமின்றி கடைப்பிடிப்பது குறித்து இரு தரப்பினருக்கும் உலக வங்கி வலியுறுத்தியது. பல்வேறு அம்சங்கள் குறித்தும் பேசப்பட்டது. ஆனாலும், பேச்சுவார்த்தையின் முடிவில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

    “இந்த கூட்டத்தின் முடிவில் உடன்பாடு ஏற்படாதபோதிலும், ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப இணக்கமான முறையில் இரு நாடுகளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உலக வங்கி தொடர்ந்து பணியாற்றும்.

    ஒப்பந்தத்தை காப்பாற்றுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு நாடுகளும் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கின்றன. இந்த விஷயத்தில் இரு நாடுகளுக்கும் உலக வங்கி தொடர்ந்து உதவி செய்யும். அதே சமயம், ஒப்பந்தத்தின் கீழ் அதன் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் முழுமையான பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதில் உலக வங்கி உறுதியாக உள்ளது” என உலக வங்கி செய்தி வெளியிட்டுள்ளது.

    இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் அமர்ஜித் சிங் தலைமையிலான குழுவும், பாகிஸ்தான் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் ஆரிப் அகமது கான் தலைமையிலான குழுவும் பங்கேற்றது.
    Next Story
    ×