search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலியான ஆவணங்களை தாக்கல் செய்தால் சிறை: நவாஸ் ஷெரீப் குடும்பத்தை எச்சரித்த பாக். நீதிமன்றம்
    X

    போலியான ஆவணங்களை தாக்கல் செய்தால் சிறை: நவாஸ் ஷெரீப் குடும்பத்தை எச்சரித்த பாக். நீதிமன்றம்

    பனாமா லீக்ஸ் விவகாரத்தில் நீதிமன்றத்தில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகன் மற்றும் மகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    பனாமா லீக்ஸ் விவகாரத்தில் நீதிமன்றத்தில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகன் மற்றும் மகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    பனாமா நாட்டில் உள்ள புகழ்பெற்ற, 'மொசாக் பொன்சேகா' சட்ட நிறுவனத்தின் உதவியுடன், பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள், வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளனர். இதுதொடர்பான ஆவணங்கள், பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியானது. அந்த பட்டியலில் நவாஸ் ஷெரிப்பின் பெயரும் இருந்ததால், அவருக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

    நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ.யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வந்தது.

    இந்த குழு முன்பாக நவாஸ் ஷெரிப், அவரது இரு மகன்கள், மகள் மற்றும் அவரது குடும்பத்தினர் பலரும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். ஷெரிப்புக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் என அனைவரிடமும் விசாரணை முடிந்தது.

    இதைதொடர்ந்து, சிறப்பு கூட்டு புலனாய்வு குழு, தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பிரதமர் நவாஸ் ஷெரிப் பதவி விலக வேண்டும் என எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

    இந்நிலையில், இவ்வழக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது, “நவாஸ் ஷெரீப்பின் மகன் ஹுசைன் நவாஸ், மகள் மரியம் நவாஸ் ஆகியோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் போலியானது என தெரியவரும் பட்சத்தில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்” என நீதிபதிகள் எச்சரித்தனர்.

    இதனையடுத்து, இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணக்கு வர உள்ளது. நாளுக்கு நாள் இவ்விவகாரம் தொடர்ந்து சூடுபிடித்துள்ளதால் நவாஸ் ஷெரீப்க்கு அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×